அரசை விரட்டியடிக்கும் காலம் நெருங்கிவிட்டது! – ஐ.தே.க. தெரிவிப்பு.

ஆட்சியிலுள்ள ராஜபக்ச குடும்ப அரசை வீட்டுக்கு விரட்டியடிக்கும் காலம் நெருங்கிவிட்டது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கோப் மற்றும் கோப்பா குழுக்களுக்கு அரசியல்வாதிகளை நியமிப்பதற்காகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்.

கோப் மற்றும் கோப்பா குழுக்களின் தலைவர்களாகச் செயற்பட்ட பேராசிரியர்களான சரித்த ஹேரத் மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர், தற்போதைய அரசின் ஊழல், மோசடிகள் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதால் இந்த விடயத்தில் அதிருப்த்தியடைந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச நிறுவனம் பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளது.

அரசு எத்தகைய நாடகத்தை நடத்துகின்றது என்பதை சிறுவர்களும் நன்கு அறிவர்.

மீண்டும் பாராளுமன்றம் கூடும்போது கோப் மற்றும் கோப்பா குழுக்களின் தலைவர்களாக ராஜபக்ச குடும்பத்திலுள்ளவர்களை நியமித்தாலும் ஆட்சேபிப்பதற்கு ஒன்றுமில்லை” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.