ஒமைக்ரான்: கடும் கட்டுப்பாட்டு தேவை… இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு கடிதம்

மகாராஷ்டிராவில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் ஒட்டுமொத்த பாதிப்பு 220-ஐக் கடந்துள்ளது. டெல்டாவை விட மூன்று மடங்கு வேகத்தில் பரவும் ஒமைக்ரானைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று, உலக நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்த பாதிப்பு 200ஐ-க் கடந்திருந்த நிலையில், மகாராஷ்டிராவில் நேற்று புதிதாக 11 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்ட 8 பேருக்கும், நவி மும்பை, பிம்பிரி, உஸ்மனாபாத் பகுதிகளில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் முதல்முறையாக 3 பேருக்கு ஒமைக்ரான் உறுதிசெய்யப்பட்டது. கடந்த மாதம் 30-ம் தேதி மாதிரி எடுக்கப்பட்டவர்களுக்கு தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ஒடிசா மாநிலத்தில் முதல்முறையாக இரண்டு பேருக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் புதிதாக 4 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 220-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவியுள்ளது. இவர்களில் 77 பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், டெல்டாவைவிட மூன்று மடங்கு வேகத்தில் ஒமைக்ரான் தொற்று பரவிவருவதாக ராஜேஷ் பூஷண் குறிப்பிட்டுள்ளார். எனவே, உள்ளூர் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பான திட்டமிடல், தரவு பகுப்பாய்வு, உரிய முடிவுகளை மேற்கொள்வது, கடும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவை தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவில் தெளிவான கண்ணோட்டத்துடன் முடிவுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார். தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான “வார்” ரூம்-களை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், சிறு அளவில் கொரோனா பரவல் அதிகரித்தாலும் ஆய்வுசெய்ய வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரவு நேர ஊரடங்கு, அதிக அளவில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவது, திருமணங்கள் மற்றும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் குறைந்த அளவிலான மக்களே பங்கேற்பதை உறுதிப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ராஜேஷ் பூஷண் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே, கர்நாடகாவில் புத்தாண்டையொட்டி வரும் 30-ம் தேதி முதல் அடுத்த மாதம் 2-ம் தேதிவரை பெருமளவில் மக்கள் கூடுதவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, வல்லுநர்களின் பரிந்துரை அடிப்படையில், திறந்தவெளியில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.