இனிவரும் நாள்களில் இறுக்கமான தீர்மானம்! சந்திரசேன எச்சரிக்கை.

கொரோனா வைரஸ் தொற்றால் வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இனிவரும் நாட்களில் கடினமான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் எதிர்தரப்பினர் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பூகோள பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொதுவான விளைவை எதிர்த்தரப்பினர் நன்கு அறிவார்கள். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மக்களைத் தவறான முறையில் எதிரணியினர் வழிநடத்துகின்றனர்.

இலங்கையில் கனிய வளங்கள் கிடையாது. சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும்போது தேசிய மட்டத்தில் அதன் விலையைக் குறைக்க முடியாது.

இது பொதுவானதொரு விடயமாகும். எரிபொருள் விலையேற்றம் என்பது தற்காலிக பிரச்சினையாகும்.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கின்றோம்.

மக்களுக்கு நிவாரண விலையில் பொருட்கள் தற்போதும் வழங்கப்படுகின்றன. புத்தாண்டுக் காலத்தின்போது மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை மக்கள் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இனிவரும் நாட்களில் கடினமான தீர்மானங்களும் எடுக்கப்படலாம்.

நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பது அரசின் பிரதான இலக்காக உள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.