எக்மோ கருவியுடன் 65 நாள்கள்; 4 மாதங்கள் கொரோனாவுடன் போராடிய சிறுவன்

ஆசியாவிலேயே முதல் முறையாக, 65 நாள்கள் எக்மோ கருவியுடன் சிகிச்சை பெற்று உயிர்பிழைத்த 12 வயது சிறுவன் மிகக் கடினமான காலத்தை வென்று வந்துள்ளான்.

அதிசயிக்கத்தக்க வகையில் 12 வயது சிறுவன், கொரோனா பாதித்து, எக்மோ கருவி பொருத்தப்பட்டு 65 நாள்கள் அதன் உதவியோடு சிகிச்சை பெற்று தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளான். ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 4 மாதங்களுக்கு முன்பு அதாவது செப்டம்பர் மாதம் சிறுவனுக்கு கொரோனா பாதித்தது. அப்போது அவனது உடலுறுப்புகள் அனைத்தும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இரண்டாம் அலை ஓய்ந்து, சிறுவர், குழந்தைகளுக்கு கொரோனா பாதிக்க ஆரம்பித்தக் காலக்கட்டம் அது.

வட இந்தியாவைச் சேர்ந்த இந்தச் சிறுவன், அப்போது சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டான். அங்கு உடனடியாக அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், சிறுவன் மருத்துவமனைக்கு வந்த போது அவனது சிறுநீரகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, உடலுக்கு ஆக்ஸிஜனை அளிக்கும் திறனற்று இருந்தது. உடனடியாக எக்மோ சிகிச்சை அளித்து, நுரையீரலுக்கு போதுமான ஓய்வு அளிக்கப்பட்டு, அது குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சையின்போது பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. ஆனால் சிறப்பான சிகிச்சை காரணமாக சிறுவன் மெல்ல குணமடைந்தான் என்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.