டெல்லியில் ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் – வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவிப்பு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு நடத்தகோரி பயிற்சி மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாருக்கும், மருத்துவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து, மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

காலதாமதமாகி வரும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் (PG NEET) கலந்தாய்வை விரைந்து நடத்தக் கோரி பயிற்சி மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில், கடந்த சில தினங்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டுமானால் உடனடியாக PG நீட் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பது 50,000 பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக கலந்தாய்வு நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதுநிலை நீட் மருத்துவ கலந்தாய்வை நடத்தக்கோரி, நேற்று உச்சநீதிமன்றத்தை முற்றுகையிடுவதற்காக ஆயிரக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் பேரணியாக சென்றபோது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இதன் பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டேவியாவின் இல்லத்தை முற்றுகையிடுவதற்காக பயிற்சி மருத்துவர்கள் ஏராளமானவர்கள் பேரணியாக சென்ற போது சரோஜினி நகர் காவல்நிலையம் முன்பு தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். பயிற்சி மருத்துவர்கள் பகதூர் ஷா ஸஃபர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது பயிற்சி மருத்துவர்களை அப்புறப்படுத்தும் பணியில் டெல்லி போலீசார் ஈடுபட்டிருந்த போது போலீசாருக்கும், மருத்துவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மருத்துவர்கள் போலீசாரை தாக்கியதுடன், போலீசாரின் வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 7 போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் போலீசார் தங்கள் மீது தடியடி நடத்தி அடித்து துன்புறுத்தியதாகவும், தங்களை அவமரியாதையுடன் நடத்தியதாகவும் மருத்துவர்கள் குற்றம்சாட்டினர்.

போலீசாரின் கடுமையான நடவடிக்கைக்கு Federation of Resident Doctors’ Association (FORDA), Federation of All India Medical Association (FAIMA) போன்ற அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன். அகில இந்திய அளவில் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.