துப்பாக்கிச் சூட்டு விவகாரம்: திருக்கோவில் பொலிஸாருக்கு உடனடி இடமாற்றம்

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து, அங்கு கடமையாற்றிவரும் அனைத்துப் பொலிஸாரையும் உடனடியாக இடமாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதி இரவு, பொலிஸ் சாஜன் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 04 பொலிஸார் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் சாஜன், துப்பாக்கிகளுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர், கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட பல பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளதுடன், பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இந்நிலையில், குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரையும் முதலில் இடமாற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அங்கு கடமையாற்றிவரும் பொலிஸாரை கட்டம் கட்டமாக இடமாற்றும் நடவடிக்கை, இன்று (30) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

– Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.