இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இரு வாரங்களில் அதிகரிப்பு!

“நாட்டில் கொழும்பு, கம்பஹா மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமானளவு அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எனவே, இந்த அச்சுறுத்தல் தொடர்பில் உணர்ந்து மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.”

– இவ்வாறு விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். இதுவரையில் 48 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இனங்காணப்படும் ஒமிக்ரோன் தொற்றாளர்களுக்கும் வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமை பின்பற்றப்படலாம்.

கடந்த இரு வாரங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமானளவு அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இதுவரையில் இனங்காணப்பட்டுள்ள 48 ஒமிக்ரோன் தொற்றாளர்களில் பெருமளவானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவுள்ளனர். இதேபோன்று அநுராதபுரம் மாவட்டத்திலும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஒமிக்ரோன் பிறழ்வால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை உணர்ந்து மக்கள் செயற்பட வேண்டும். மீண்டும் நாடு முடக்கத்துக்குச் செல்லாமல் இருப்பதற்குச் சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாகப் பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.