இலங்கை மருத்துவ மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு வசதி.

சீனாவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த இலங்கை மருத்துவ மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு கௌரவ பிரதமர் முன்வைத்த விசேட கோரிக்கைக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சாதகமான பதில்….

தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கை மருத்துவ மாணவர்களுக்கு சீனாவிற்கு வருகைத்தருவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் நேற்று (09) சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கௌரவ வாங்க் யீ அவர்களை அலரி மாளிகையில் சந்தித்த போது விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங்க் யீ அவர்கள், இலங்கையின் மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் அங்கு வருகைத்தருவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சுடன் நெருக்கமாக செயற்படுமாறு இலங்கைக்கான சீன தூதுவருக்கு உடனடியான அறிவுறுத்தினார்.

சீனாவின் மருத்துவ கல்லூரிகளில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவந்த 400 மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 1200 இலங்கை மருத்துவ மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ளனர்.

கொவிட் தொற்று நிலைமை காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களுக்கு மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு முடியாது போயுள்ளது.

பிரதமரின் கோரிக்கைக்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக உறுதியளித்தார்.

இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு மேலும் ஒத்துழைத்தல், துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயம் ஆகியவற்றிற்கான முதலீடுகளை ஈர்த்தல், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே சுற்றுலாத்துறையை மேம்படுத்தல், இலங்கையின் ஏற்றுமதியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே பௌத்த மற்றும் கலாசார உறவினையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இச்சந்திப்பினை தொடர்ந்து கீழ்வரும் உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

> பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை

> கொழும்பில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான மானிய வீட்டுத்திட்டம் தொடர்பான பரிமாற்றக் கடிதம்

> பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ்

> சிறுநீரக நோய்க்கான நடமாடும் பரிசோதனை அம்பியுலன்ஸ்களுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ்

சீன-இலங்கை இருதரப்பு உறவின் 65 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சீன கொம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டு நூறாண்டுகள் பூர்த்தி மற்றும் சீன-இலங்கை இருதரப்பு உறவின் 65 ஆண்டு பூர்த்தி ஆகியவற்றை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கி கடந்த ஆண்டு நினைவு நாணயமொன்றை வெளியிட்டிருந்தது.

அந்நாணயங்களை இதன்போது பிரதமர் சீன வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நினைவு பரிசாக வழங்கினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களுக்கு சீன ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ அவர்கள், ‘இலங்கைக்கு தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு சீனா தொடர்ந்து செயற்படும்’ என குறிப்பிட்டார்.

இருதரப்பு சந்திப்பின் போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்ததாவது,

அமைச்சர் அவர்களே, உங்களை மீண்டும் இலங்கைக்கு அன்புடன் வரவேற்கிறோம். இத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நீங்கள் இலங்கைக்கு வருகைத்தந்தீர்கள். நீங்கள் மீண்டும் வருகைத்தந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி.

இந்த ஆண்டு நம் இரு நாடுகளுக்கும் மிக முக்கியமான ஆண்டாகும். இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 65வது ஆண்டு நிறைவையும், இரப்பர் அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70வது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவிக்க எனக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள். இந்த முக்கியமான மைல்கல்லை குறிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி விசேட நினைவு நாணயத்தை வெளியிட்டது உங்களுக்குத் தெரியும்.

கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக போராடுவதற்கான ஒத்துழைப்பிற்கு சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சினோஃபார்ம் தடுப்பூசிகளின் தொடர்ச்சியான விநியோகம் எங்கள் தடுப்பூசி திட்டத்தின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.

ஏனைய நாடுகளைப் போலவே இலங்கையின் பொருளாதாரமும் தொற்றுநோய் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டமை நீங்கள் அறிந்ததே. நமது பொருளாதார மீட்பு மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கான சீனாவின் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம்.

இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் சீனா போன்ற நட்பு நாடுகளின் ஆதரவுடன், இந்த சவால்கள் விரைவில் சமாளிக்க முடியும் என நம்புகிறோம். பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் உங்களுடனும் சீன அரசாங்கத்துடனும் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்பார்க்கின்றேன்.

Leave A Reply

Your email address will not be published.