எம்.கே.பாண்டே ராணுவ துணை தலைமை தளதியாக நியமிக்க ஒப்புதல்

இந்திய ராணுவத்தின் அடுத்த துணை தலைமை தளபதியாக எம்.கே.பாண்டேயை நியமிக்கும் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போதைய துணை தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சி.பி.மொஹந்தி இம்மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த துணை தலைமை தளபதியை நியமிப்பதற்கான ஆலோசனைகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், அருணாசல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் கிழக்குப் பிரிவு தளபதியாக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் எம்.கே.பாண்டே அடுத்த துணை தலைமை தளபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுள்ளதாகத் தெரிகிறது. அந்தமான்-நிக்கோபாா் தீவுகள் பகுதியில் முப்படைகளின் தலைமைப் பொறுப்பையும் எம்.கே.பாண்டே வகித்துள்ளாா்.

இதனிடையே முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு எவா் பெயரும் இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நாட்டின் முப்படைகளின் முதல் தலைமை தளபதி விபின் ராவத் ஹெலிகாப்டா் விபத்தில் பலியானதைத் தொடா்ந்து அந்தப் பதவி காலியாக உள்ளது. தற்போது மூப்பு அடிப்படையில் ராணுவத்தின் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே மட்டுமே அந்தப் பதவிக்குத் தகுதி பெற்றவராக உள்ளாா். நரவணேயின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் மாதம் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நரவணேவுக்கு முப்படைகளின் தலைமை தளபதி பதவி வழங்கப்பட்டால், விரைவிலேயே எம்.கே.பாண்டே ராணுவத்தின் தலைமைத் தளபதியாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.