ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டபட்டுள்ளதாக ஐ.எஸ்.சேகர் என்ற தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சோழிங்கநல்லூர் வட்டாச்சியர் மணிசேகர் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் குடியிருப்புகளை அகற்ற வந்துள்ளனர்.

மக்கள் வசித்து வரும் குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெத்தெல்நகர் பகுதியை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பெத்தேல்நகர் பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 30 வருடங்களாக இந்த பகுதியில் வசித்து வரும் எங்களுக்கு அரசு சார்பில் மின்சாரம், குடிநீர் இணைப்பு, சாலை, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து சலுகையும் அரசு செய்துவிட்டு தற்பொழுது இந்த இடத்தை ஆக்கிரமிப்பு என்று கூறினால் நாங்கள் எங்கு செல்வது என்ற கேள்வியை முன் வைக்கின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அப்பகுதி மக்களால் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலாங்கரை ஆய்வாளர் மகேஷ்குமார் தலைமையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியரசு தினமான இன்று அரசு விடுமுறை நாளிலும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவோம் என வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் பகுதிக்கு வந்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.