சோரியாஸிஸ் நோய்க்கான மருத்துவ தைலம்.

சோரியாஸிஸ் என்று பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த தோல்நோய், சித்த மருத்துவத்தில் செதில் உதிர் படை (அ) செதில் உதிர் நோய் (அ) காளாஞ்சகப் படை என்று குறிப்பிடப்படும். நாட்பட்டு குணமாகும் நோய்களுள் ஒன்று செதில் உதிர் படை எனலாம். குணமான பின்னும் 5 வருடங்களுக்கு ஒருமுறையோ, கால மாறுபாட்டினாலோ, இது திரும்ப வருவதுண்டு.

நாட்பட்டு இருக்கும் நோய்களையும், குணமாகக் கடினமாக உள்ள நோய்களையும் கன்ம நோய்கள் என வகைப்படுத்தி இருப்பார் அகத்தியர். அத்தகைய நோய்களுள் ஒன்று செதில் உதிர் படை என்னும் சோரியாஸிஸ். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் வரும் நோய்களுள் ஒன்று செதில் உதிர் படை.

குறிகுணங்கள்

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

உடலில் சிறு தடிப்புகள் ஏற்படும். மென்மையான, வெண்மையான, பளபளப்பான மீன் செதில்கள் போன்று மூடப்பட்டு இருக்கும். செதில்களைப் பிய்த்தால், குண்டூசி முனையளவு ஒத்த ரத்தக்கசிவு ஏற்படும். படை உருவாகும் இடங்களும், வடிவமும் ஆளுக்கு ஆள் வேறுபடலாம். உடலெங்கும் படை காணப்பட்டு செதில் உதிரலாம். தலை, காதின் பின்புறம் சிறுசிறு கட்டிகள் உருவாகி செதில் உதிரலாம்.

நாணயம் போன்ற வடிவமுடைய படைகளும், கிருமித் தொற்று இல்லாத கீழ் கொப்புளங்களும் ஏற்படலாம். அக்குள், தொடைமடிப்பு, தொப்புள் ஆகிய இடங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நீர்க்கசிவு ஏற்படலாம். உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடிப்பான வெடிப்புகளை உடைய படைகள் ஏற்படலாம். நாட்பட்ட நிலையில், முழங்கால்களைப் பாதித்து, வாதம் போன்று நகரவிடாமல் பாதிப்பை ஏற்படுத்தலாம். நகங்களைப் பாதித்து, நகத்தின் குறுக்கே பள்ளம் விழலாம். நகத்தின் நிறம் மாறலாம். அரிப்பு இல்லாமலும், சிலருக்கு மிகுதியான அரிப்பும் காணப்படலாம்.

நோய் வரக் காரணம்

வாத நாடி பாதிப்படைந்து, அதனால் பிற நாடிகளையும் (பித்தம், கபம்) பாதிப்புக்கு உள்ளாக்கி இந்நோய் ஏற்படும். நவீன அறிவியலின்படி, இந்நோய் வர காரணம் இன்னும் அறியப்படவில்லை. தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு சில மருந்துகளினாலும், நோய் எதிர்ப்புத் திறனின் மாறுபாட்டாலும், பரம்பரை காரணமாகவும், மன அழுத்தத்தினாலும் இந்நோய் வரலாம் என நவீன அறிவியல் விளக்கமளிக்கிறது.

சித்த மருத்துவம் :

1) வெட்பாலைத் தைலம்

வெட்பாலை இலைகளையும், தேங்காய் எண்ணையையும் கொண்டு தயாரிக்கப்படும் வெட்பாலை தைலத்தை வீட்டிலேயே தயார்செய்து கொள்ள முடியும். வெட்பாலை (wrightia tinctoria) இலைகளின் எடைக்கு சமஅளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். வெட்பாலை இலைகளை அகலமான பாத்திரத்தில் இட்டு, இலைகள் மூழ்கும் வரை தேங்காய் எண்ணெய் ஊற்றி, வெயிலில் வைக்கவும். மூன்று முதல் ஐந்து நாட்கள் வெயிலில் வைக்க, கருநீலச் செம்மை நிறத்தில் (கிட்டத்தட்ட பொட்டாசியம் பெர்மாங்கனேட் நிறம்) அழுத்தமான தைலம் கிடைக்கும். இலைகளைப் பிழிந்து தைலத்தைச் சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை

செதில் உதிர் படை இருக்கும் இடங்களில் தைலத்தைப் பூசி, மூன்று மணி நேரம் ஊறவைத்து, பின் பாசிப்பயறு மாவு பூசிக் குளித்து வரலாம். தொடர்ந்து பயன்படுத்தினால் நோய் நீங்கி நலம் பெறலாம். நோயின் தீவிர நிலையில் சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வெட்பாலைத் தைலத்தை 5-10 மி.லி. அளவு எடுத்து, பாலுடன் கலந்து உள்ளுக்கும் சாப்பிட்டு வரலாம்.

வெட்பாலைத் தைலம் தயாரிக்க சுத்தமான செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். சித்த மருந்துக் கடைகளில் வெட்பாலைத் தைலம் கிடைக்கிறது. தயாரிக்க இயலாதவர்கள் வாங்கிப் பயன்படுத்தலாம்.

2) பிரமதண்டு தைலம் : பாதிக்கப்பட்ட இடங்களில் வெளிப்பிரயோகமாகப் பயன்படுத்தலாம்.

3) பறங்கிப்பட்டை சூரணம் : அரிப்பு இருந்தால் பறங்கிப்பட்டை சூரணம் எடுத்துக் கொள்ளலாம்.
அளவு: 1-3 கிராம் அளவு / காலை, இரவு பாலுடன்

4) கருஞ்சீரக சூரணம் : தீவிர நிலையில் உள்மருந்தாக எடுத்துக் கொள்ளலாம்.
அளவு :1-3 கிராம் அளவு / காலை, இரவு சுடுநீருடன்

உணவுக் கட்டுப்பாடு

அரிப்பு ஏற்படாமல் இருக்க கத்தரிக்காய், பாகற்காய், மாங்காய், சேனைக்கிழங்கு, சேம்பு, அகத்திக்கீரை, கொய்யாப்பழம், கேழ்வரகு, சோளம், கம்பு, மீன், கருவாடு போன்றவற்றைத் தவிர்க்கலாம். முன்னரே குறிப்பிட்டது போன்று, நாட்பட்டு குணம் ஆகும் நோய்களுள் ஒன்றாவதால் பொறுமையாக மருந்து அருந்துதல் வேண்டும். ஒரு வருட காலம் வரை கூட, சிலருக்கு மருந்து எடுக்க வேண்டிய சூழல் வரலாம். அதனால் மன அழுத்தம் இல்லாமல் இருக்க தியானம், ஆசனம், மூச்சுப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.