கவிஞர் சுப்பிரமணியம் ஜெயச்சந்திரனின் ‘என் பள்ளிக்கூட உலகம்’ கவிதைத் தொகுப்பு குறித்த தொகுநிலை நோக்கு.

கவிஞர் சுப்பிரமணியம் ஜெயச்சந்திரனின்
‘என் பள்ளிக்கூட உலகம்’ கவிதைத் தொகுப்பு குறித்த தொகுநிலை நோக்கு
திரு. எஸ். விஜயகிருஷ்ணன்
கவிஞர்,ஊடகவியலாளர்,வங்கியாளர்,செய்தி வாசிப்பாளர்.
சென்னை.

வவுனியா ‘ஜெபவி’ வெளியீட்டின் இரண்டாம் வெளியீடு ‘என் பள்ளிக்கூட உலகம்’ கவிஞர் சுப்பிரமணியம் ஜெயச்சந்திரனின் கவிதைகளில் மேலே செல்லுகின்ற வரிகள் மகிழ்வூட்டங்களையும் கீழே வருகின்ற வரிகள் துயரச்சுமை, துன்பச்சுமை என்கின்ற ஒரு நிலையையும் காட்டுகின்றது. அவருடைய கவிதையில் அத்தனையும் ஊட்டமாக வருகின்றமையை நோக்கலாம். பாரதியின் அழகான கவிதை வரிகளைத் தலைப்பாக வைத்துள்ளார். உதாரணமாக, “~பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே..”. இந்த மகிழ்வூட்டங்களும் துயரச்சுமைகளும் நாணயத்;தினுடைய இருபக்கங்கள் போல் ஒன்று அமைதியுறும், மற்றது அமைதியில்லாமற் போகும். ஆழ்ந்த சிந்தனை வயப்பட்ட கவிதைத்தொகுப்பு இது. எதிர்கால மனிதப்பிறவி வகுப்பறைக்குள் நுழையாதிருப்பின் இதனைப் படிக்கும் போது கண்களில் கண்ணீரை வரவழைக்கும், கவிதைகள் தொடர்ந்து அவர் கூறுகின்றார்.

“எதிர்கால மனிதப் பிறவி
வகுப்பறைக்குள் நுழையாதிருப்பின்
அறிவும் அறிகையும்
திறனும் மனவெழுச்சியுமான
தேர்ச்சிகள் இன்றித் தேரா மாந்தாராய்
தெருவில் நிற்றல் கூடும்.”

இந்தச் சிந்தனை என்னவென்றால் எதிர்காலத்;தான் தெருவில் நிற்கக்கூடாது என்கின்ற வெளிப்பாடாக ஒரு சிந்தனை.
சுப்பிரமணியம் ஜெயச்சந்திரனை இந்தக் கவிதை நூலூடே நான் அறிந்து கொண்டேன். அவருடைய மாணவர்களை நான் மனதில் நிறுத்திப் பார்த்தேன். நிகழ்வுகளைச் சுமந்த காலத்தின் ஒரு வெளியாக ஒரு கவிதைத் தொகுப்பு. அனுபவ உணர்வுகளை வார்த்தைச் சங்கமத்தில் வரிசைப் படுத்திய தொகுப்பு இது. இக்கவிதைத் தொகுப்புக்கான கடவுச்சொல் என்ன தெரியுமா? அவரவர் பள்ளி நாட்களின் நினைவலைகள் தான். வீணையின் நரம்புகளை மீட்டுதல் போல கால மீட்டுதல் இது. அது ஆனந்தபைரவியாகவும் இருக்கின்றது, முகாரியாகவும் இருக்கின்றது. இரண்டின் முகவரியானது தான் இந்த நூல். சித்திரக்கவி சித்திராதேவி, அன்புப்புவி அன்ரோனியா ஆசிரியர்கள் அளித்த தமிழ் விருந்தையும் நான் முடிவிலே படித்தேன்.

இருபதாம் நூற்றாண்டின் பிற்கூற்றிலிருந்து தனக்கென ஒரு அழியா இடத்தைப் பிடித்துக்கொண்டு இன்றுவரை இடையறாது தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் ஜெயச்சந்திரன் ஈழத்துத் தமிழ்க் கவிதையில் தோன்றிய ஒரு நம்பிக்கை நட்சத்திரங்களிலே ஒருவர் இவர். இலக்கியத்திற்குள் தெளிக்கின்ற அணுகுமுறை, நுட்பங்களையும் முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். கவிதையின் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் உத்திமுறைமைகளிலும் தனியொருபாகனாக, பாலமாகப் பரிமளிக்கும் பாங்கு தமிழ்த்தடத்தில் இவருக்கு ஒரு பங்கு வைத்துள்ளது. இதைத்தான் இந்த நூலிலே நான் படித்தேன்.

கவித்துவம் என்பதை விட இதை நான் காலத்துவம் என்று சொல்வேன். இந்த மகத்துவமான தொகுப்பில் கலாமுடைய அனுபவங்களை நாம் காணலாம். ஆனால் இது காலத்தின் அனுபவங்கள். ஜெயச்சந்திரனுடைய காலத்தின் அனுபவங்கள். இந்த கால அனுபவங்கள் இருக்கின்றதே, அதை எப்படிப் பார்க்கலாம், கால கண்ணோட்டங்கள், காலத்தில் கேட்ட மொழிகள், காலம் பார்த்த மொழிகள், இவைகள் எதிர்காலத்தானை எப்படி அவதானிக்கும்? இதுதான் இவருடைய சிந்தனையோட்டமாக இந்த நூலிலே அமையப் பெற்றுள்ளது. அனுபவங்களை எழுத்துக்கள் ஊடாக அவதானிக்கும் போது எமக்குத் தோன்றும் விடயம், ஆசிரியர் மாணவர் இடைவினை உறவு, புனையப்பட்ட மகிழ்வூட்டமான தொடர்பாடல் இந்தப் புத்தகம்.

எடுத்துரைப்பு முறைகளில் பாரதியினுடைய கர்ஜனைகளையும், அதிபனின் அர்ச்சனைகளையும் கவிதைகளைப் படிக்கும் போது புரியும். இயேசு சிலுவை சுமந்த போது வரும் பிரார்த்தனை கீதமும், சரஸ்வதி வீணையைச் சுமந்த போது வரும் பூர்வகல்யாணி இராகமும் இவை இரண்டையும் ஒருசேர நான் இந்தப் புத்தகத்தைச் சுமந்த போது கேட்கின்றேன். ரீச்சருக்காக ரோசாப்பூ கொண்டுவரும் மாணவனின் உணர்வுதான் எனக்கும். அனுபவமல்லவா அது. ஆசானின் முடி கிரீடமும் அவர் மண்டையில் பூத்த அறிவு ரோசாவும் வாசமாக இந்தப் புத்தகத்தைப் படைத்துள்ளார். சில வரிகளைப் பாருங்கள்.
“ரீச்சர் எங்கட வீட்டுல அஞ்சு பேர்

அப்பா மட்டுந் தான் வேலை…

எங்களுக்கு நீங்க தந்த காசுதான்

அடுப்பு மூட்ட…

என்றான் ஏழாமாண்டு எடிசன்.

வார்த்தை அக்கினியை வாரிப் போட்டது.
என் இதயத்தில் இருநூறு கிலோ பாரம்.

நானென்ன அரசியலா நடத்துகிறேன்

ஆசிரியம் காக்க

அடவியில் அலைகின்றேன்.

மொழியும் இலக்கியமும் தான் அறிவேன்
ஏழாமாண்டு எடிசனின் உளவியல் அறியேன்.”
இது கவிஞருடைய வரிகள்.
சங்கப் பாடலின் கோரையும் நாணலும் கோரைப் பற்களிலே குவிந்திருக்கும். கடையனுக்கும் கடைத்தேற்றம் கடைவாய்ப்பல்லிலே ஒளிந்திருக்கும். பல்துறை உத்தியோகத்தர்களும் பள்ளி எனும் முகவரியில்தானே பயணித்தவர்கள். பல்துறை சார்ந்தவர்களும் பள்ளிக்கூடத்தில் இருந்துதானே வந்திருக்கின்றார்கள். இவற்றைக் கவிதைத் தொகுப்பினூடே கண்டு கொண்டேன்.
கவிதை ஊட்டங்களில் சில வரிகளைச் சொல்கின்றேன். ~போற்றியென் வாழ்முதலாகிய பொருளே…|| என்கின்ற போது,
“எனக்கொன்றுமே இல்லை

பாடமுமில்லை வகுப்புமில்லை

சுதந்திரப் பிரியன்.”

என்று அந்த இளமைக்கால ஓட்டங்களைச் சொல்கின்ற பாங்கு இருக்கின்றதல்லவா? அந்த இடத்தில் எனக்கு ஒரு வேகம் பிடிக்கின்றது. ~இது அவன் திரு உரு இவன் அவன் எனவே…| தலைப்பிலான கவிதையில் வகுப்பறை நோக்கி நகர்கின்ற போது, பிள்ளைகளைப் பார்க்கின்ற போது கவிஞருக்கு வருகின்ற சிந்தனையைப் பாருங்கள்.
“வகுப்பறை நோக்கி நகர்

பிள்ளையைப் பார்

அவன் தான் உனக்கு உலகம்

என்றது மனசு.

மீண்டும் கனவும் நனவும்

சங்கமம் ஆயிற்று உள்ளமதில்.”
ஒரு வார்த்தையினுடைய (உனக்கு உலகம்) அர்த்தம் அந்த இடத்திலே அற்புதமாகி விடுகின்றது. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
“சாத்தானுக்கு வேதம் ஓதியது போல
அவர் காளாஞ்சி அர்ச்சனை செய்தார்.
கேட்டும் வெட்கமின்றி
பார்த்தும் குருட்டுத்தனம் பெற்று

திருமணநாள் பெண்மை போல
நிற்றல் பெற்றேன்.”
உதாரணங்கள், உவமைகள் அத்தனையும் பூரணமாக, ஒரு பூரணத்துவமாக உள்ள கவிதை நூல் என்று சொல்வேன்.
பள்ளி நாட்களினூடே தவித்த நினைவுகளை, புலம்பிய புலம்பல்களை, கண்ணீர் விட்ட நினைவுகளை இக்கவிதைத் தொகுப்பு தொட்டுச் தொட்டுச் செல்கின்றது. இந்தக் கவிதைப் புத்தகம் என்னுடைய வாழ்க்கையின் வழிகாட்டுதலாக இருக்கின்றது. அந்த உந்துதல் இந்த அழகான கவிதைத் தொகுப்பில் அனைவருக்கும் வரும்.
“கற்றறிவும் பட்டறிவும்
பஞ்சாமிர்தம் ஆக வாயில் வந்தது.
கடை திறப்பில் யாத்திரிகனை வா என்றது போல்
இங்கிதமாய் அழைத்தார் அதிபர்.

என்ன மாதிரியான வார்த்தைகள். “நான் என்ன அரசியலா நடத்துகின்றேன்.” இதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. எடிசன் என்ற மாணவன் சொன்னதற்கு அவர் சொல்கின்றார். நான் என்ன அரசியலா நடத்துகின்றேன். இதனை இன்று எழுதும் போது எடிசனின் உளவியல் அறியேன். இது அன்று அவர் எப்படி இருந்தார் என்ற உளவியற் பாங்கைக் கொண்டு வருகின்றது. இன்று எடிசனின் உளவியலைக் கண்டிப்பாக அவருடைய அனுபவப் பதிவிலே சொல்ல முடியும். ஆனால் அன்று அவரால் முடியாது. வெட்டவெளிச்சமாக ஒரு கவிஞன் எடுத்துரைக்கின்றான். இவர் தான் உண்மைக் கவிஞர். எடிசனுக்கு வைத்தியராக வர ஆசை. அப்படி வைத்தியராக ஆகியிருந்தால் கொரோனாக் காலத்தில் எத்தனை பேருக்குப் பயனுள்ளதாக இருக்கும். அத்தகு சிந்தனையைக் கூட அழகாய் வெளிப்படுத்துகின்றார்.

~என் பள்ளிக்கூட உலகம்’ மொழிதல் ஊடான மொழியே உள்ளமாகச் சொல்லப்படுகின்றது. அல்லது செயற்படுகின்றது என்று சொல்லலாம். வாசகனை அந்தக் காலத்திற்கே இட்டுச் செல்லும். சில சமயம், சில கவிதைகள் அந்தக் காலத்தை உங்களிடம் கேட்டுச் சொல்லும். கல்விப் புலம் சார்ந்த அனுபவங்கள், அகம் சார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடாக இந்தக் கவிதை நூலை நான் பார்க்கின்றேன்.

ஒரு விளக்கில் தூண்டல்கள் வேண்டும். ஆனால் அந்த விளக்கே தூண்டலாக இருந்தால் அப்படிப்பட்ட தூண்டலாகத்தான் இக் கவிதைத் தொகுப்பு. இந்த நூல் பல்பரிமாணப் பார்வையில் ஆக்கப்பட்டுள்ளது. சொல்லுக்குப் பல் பரிமாணங்கள் உண்டு.
காலன் கயிறு வீசுதல் போல

பிரதி பிரதியெடுத்து

காலக் கணக்கு காகிதம் நீட்டினார்

ஐயரின் உதவியாள் தீர்த்தம் வழங்குதல் போல.”
அழகான உவமை. அத்துடன் பள்ளிக்கூட வளர்ப்பிலுள்ள பண்பாட்டைப் பார்த்து அவரிடத்தில் ஏற்பட்ட மகிழ்வு ~பூரிகை கொண்டேன்| என்கின்ற வார்த்தையால் அனைவருக்கும் பூரிகை கொண்ட வாழ்க்கை.
“பள்ளிக்கூடம் வளர்த்துள்ள பண்பாட்டை
பார்த்து பூரிகை கொண்டேன்.

கலையும் பண்பாடும் இன அடையாளங்கள்

அதன் வேர்கள் கற்றலில் கருவாகின்றன.

அவரவர் செய்தல் அவரவருக்கே

அது அது செய்தல் சமூகத்திற்கே

ஆசிரியர் செய்தல் அகிலத்திற்கே.”
அனுபவங்களைத் தான் இக்கவிதைத் தொகுப்பு தந்துள்ளது. மிகச்சிறப்பாகப் படைத்துள்ளார். ஒரேயொரு கவிதை என்னை மிகவும் ஆட்டிவிட்டது. உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ…|என்ற கவிதையில்,
“நரி நரி தான்

பரி பரி தான்

நரியால் பரியின் ஒரு மயிரையும்

பிடித்துப் பிடுங்க இயலாது.

அந்த அமைப்பின்

மாலைநேர

சந்திப்பின் பின்னரான சிந்திப்பு.”
அரசிடம் நாம் அதிகம் கேட்கின்றோம். என்ன கேட்போம்? வரி அறவிட வேண்டாம் என்று கேட்போம். நான் அரசிடம் கேட்கின்றேன். அரசே எங்களுக்கு நிறைய வரி போடுங்கள். எந்த வரி என்றால் கவிஞர் ஜெயச்சந்திரனின் தமிழ் வரிகளாக இருக்கட்டும். அப்படிப்பட்ட அருமையான கவிதை நூலைப் படைத்துள்ள அவரை நான் வாழ்த்துகின்றேன்.

நாடுகளுக்கு ஆளுனர்களை அந்தந்த அரசு நியமிக்கும். நாமும் ஆளுனர் ஆகலாம். எப்படி ஆளுனர் ஆகலாம் என்றால் சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் ஒரு மொழி ஆளுனர். அதேபோல் நாம் ஒரு மொழி ஆளுனராக ஆக வேண்டுமென்றால் ~என் பள்ளிக்கூட உலகம் கவிதைத் தொகுப்பைப் படிக்க வேண்டும். இந்தப் புத்தகத்திற்கான என்னுடைய வாழ்த்தினைத் தெரிவித்து, இவர் மேலும் பல நூல்களைப் படைக்க வேண்டுமென்கின்ற அவாவினையும் முன்வைத்து காகிதப் பூக்களுக்குத் தேன் சுரக்க வைத்த ஜெயச்சந்திரனுக்கு எங்களுடைய பாராட்டுதல்களையும் வழங்கி விடைபெறுகின்றேன்.

Vijayakirusnan Chennai

Leave A Reply

Your email address will not be published.