நெல் கொள்முதலில் திமுகவினர் கொள்ளையோ கொள்ளை – பாஜக குற்றச்சாட்டு!

தமிழக முதல்வரின் அறிவிப்பையோ, எச்சரிக்கையோ ஒரு பொருட்டாக மதிக்காத திமுகவினர், அமைச்சர் சக்கரபாணி அறிக்கையை மட்டும் ஏற்பார்களா என்ன? என பாஜக விவசாயி அணி மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாஜக விவசாயி அணி மாநிலத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் தங்கள் நெல்லுக்கு ஒரு பைசா கூட கொடுக்கத் தேவையில்லை என்று கடந்த 9-ம் தேதி அறிக்கை விட்டார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி. ஆனால் வழக்கம்போல திமுகவினர் கிளை, வட்டம், மாவட்டம் என கூட்டணி அமைத்து 40 கிலோ மூட்டைக்கு ரூ.60 என்று கட்டாய வசூல் செய்துகொண்டிருக்கிறார்கள். இன்று கூட புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல்கொள்முதல் அதிகாரி ரூ.60-க்கான செலவை பட்டியலிட்டு வசூல் செய்திருக்கிறார்.

ஆனால் அமைச்சரோ ரூ.83 கோடி கூடுதலாக நெல் கொள்முதல் ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்கப்படுகிறது என்று அறிவிக்கிறார். ஊழியர்களைப் பற்றி கவலைப்படும் அமைச்சர் திமுகவினரின் கூட்டு கொள்ளையை மறந்துவிட்டு பேசுகிறார். பணம் கொடுக்க மறுக்கும் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தட்டிக்கேட்கும் பாஜக விவசாய அணியினர் மிரட்டப்படுகிறார்கள். மூட்டைக்கு ரூ.30 வசூல் செய்வதே வேதனையாக இருக்கிறது என்ற அமைச்சர் அறிக்கைக்குப்பிறகு, ரூ.60-ஆக திமுகவினரால் வசூல் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2019 முதல் 2021 வரை 76.41இலட்சம் டன் நெல் கொள்முதலில் 2000 கோடி அரசுக்கு இழப்பு என்று அறிக்கைவிட்டு அரசியல் செய்யும் அமைச்சர், கடந்த 8 மாதங்களாக திமுகவினர் செய்யும் அராஜகக்கொள்ளையை மறந்துவிட்டு பேசுகிறார்.

தமிழக முதல்வரின் அறிவிப்பையோ, எச்சரிக்கையோ ஒரு பொருட்டாக மதிக்காத திமுகவினர், அமைச்சர் சக்கரபாணி அறிக்கையை மட்டும் ஏற்பார்களா என்ன? கடந்த 8 மாதங்களில் 20 இலட்சம் டன்னுக்கு மேல் நடைபெற்ற நெல் கொள்முதலில், இதுவரை 200 கோடிக்கு மேல் ஏழை விவசாயிகளிடமிருந்து வசூல் செய்துள்ளார்கள் திமுக வசூல் ராஜாக்கள்.அதைவிடக்கொடுமை கனிமவளக்கொள்ளை.

கல் உடைக்கும் குவாரிகளும், மண் அள்ளி லாரிகளில் விற்பனை செய்வோரும் முறைப்படி அனுமதி பெற்றிருந்தும் ஒரு யூனிட்டுக்கு ரூ.300 என்று அடாவடியாக சாலைகளில் வாகனங்களை நிறுத்தி, வசூல் செய்கிறார்கள் திமுகவின் சீருடை அணிந்த சிப்பந்திகள்.

சமீபத்தில் சுல்தான்பேட்டை,நெகமம் பகுதிகளில் முறைப்படி அனுமதி பெற்ற குவாரி உரிமையாளர் இலஞ்சப்பணம் தர மறுத்ததால் அதிக பாரம் என்று சொல்லி ரூ.50,000 அபராதம் விதித்துள்ளார்கள் அரசு அதிகாரிகள்.

அனுமதி கொடுத்து மண் அள்ளினால் வசூல் செய்யமுடியாது என்று அறிந்த அரசு, அனுமதியில்லாமல் மண் அள்ள அனுமதியளித்து வசூல் வேட்டையில் சாதனை புரிகிறது திமுக அரசு.இதுவே விஞ்ஞான ஊழல்.

காலத்தின் கொடுமை கட்டுப்பாடுகளின்றி இயங்கிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. இலஞ்சம், இலாவண்யம் தலைவிரித்தாடுகிறது. தமிழக முதல்வர் தலையிடாவிட்டால் மக்கள் கொந்தளிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.