கூட்டு ஆவணத்துக்கான பதிலை மோடி அரசு செயலில் காட்டும்! – சம்பந்தன் நம்பிக்கை.

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் அனுப்பிய கூட்டு ஆவணத்துக்கான எழுத்துமூல பதிலை மோடியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அதற்கான பதிலை மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்குச் செயலில் காட்டும் என்று நாம் நம்புகின்றோம்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் பேசும் மக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலித்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்டது. இந்த ஆவணத்துக்கான பதில் மோடி தரப்பிடமிருந்து வந்ததா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பொது நிலைப்பாட்டை அந்தக் கூட்டு ஆவணத்தில் நாம் பிரதிபலித்துள்ளோம். அது காத்திரமான ஆவணம். இந்தியப் பிரதமருக்கு நாம் அனுப்பிய அந்தக் கூட்டு ஆவணத்துக்கான எழுத்து மூல பதிலை நாம் எதிர்பார்க்கவில்லை. எனினும், அதற்கான பதிலை மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசு, இலங்கை அரசுக்குச் செயலில் காட்டும் என்று நாம் நம்புகின்றோம்.

எமக்கான எழுத்துமூல பதிலை எதிர்பார்த்து அந்தக் கூட்டு ஆவணத்தை நாம் அனுப்பவில்லை. தமிழ்பேசும் மக்களின் விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசு ஆழ்ந்த கரிசனை எடுத்து இலங்கை அரசுக்கு சில விடயங்களைச் செயலில் புரியவைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே அந்த ஆவணத்தை நாம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைத்துள்ளோம்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.