தென் ஆப்பிரிக்காவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.

தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. பிப்ரவரி 17 அன்று தொடங்கியுள்ள டெஸ்ட் தொடர், மார்ச் 1 அன்று நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வந்த டெஸ்டில் முதல் நாளன்று டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. கடைசியில் அது சரியான முடிவாகவும் அமைந்தது. தென் ஆப்பிரிக்க அணி, 49.2 ஓவர்கள் மட்டும் விளையாடி 95 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி அட்டகாசமாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹம்ஸா அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராகக் குறைந்த ரன்களை தென் ஆப்பிரிக்கா அணி எடுத்தது.

இதன்பிறகு விளையாடிய நியூசிலாந்து அணி 117.5 ஓவர்களில் 482 ரன்கள் எடுத்தது. ஹென்றி நிகோல்ஸ் 105 ரன்களும் டாம் பிளெண்டல் 96 ரன்களும் எடுத்தார்கள். நிகோல்ஸின் 8ஆவது டெஸ்ட் சதம் இது. 11ஆவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய ஹென்றி ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்து அசத்தினார்

கடைசி விக்கெட்டுக்கு பிளெண்டலும் ஹென்றியும் 94 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்காவை வெறுப்பேற்றினார்கள். ஒலிவியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 387 ரன்கள் முன்னிலை பெற்றது. 2ஆவது இன்னிங்ஸிலும் தெ.ஆ. பேட்டர்களுக்குச் சோதனை தொடர்ந்தது.

தொடக்க வீரர்களை (எர்வீ, எல்கர்) ரன் எதுவும் எடுக்க விடாமல் வெளியேற்றினார்கள் செளதியும் ஹென்றியும். மார்க்ரம் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2ஆம் நாளின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி, 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்தது. வான் டர் டுசென் 9, பவுமா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 353 ரன்கள் பின்தங்கியிருந்தது.

இதையடுத்து 3ஆம் நாளான இன்று தென்ஆப்பிரிக்க அணி 41.4 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் தோல்வியை அடைந்த
து. பவுமா அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். செளதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் நியூசிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 276 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மேட் ஹென்றி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.