219 இந்தியர்களுடன் மும்பை வந்தடைந்தது ஏர் இந்தியா விமானம்

ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டில் இருந்து 219 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் மும்பை வந்தடைந்தது.

உக்ரைனுக்கு எதிராக ரஷியா வியாழக்கிழமை போா் தொடுத்த நிலையில், உக்ரைன் வான் பகுதியில் பயணிகள் விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுமாா் 16 ஆயிரம் இந்தியா்கள் உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் இந்தியா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இதற்காக அண்டை நாடுகளான ருமேனியா, போலாந்து, ஹங்கேரி எல்லைகளுக்கு சாலை மாா்க்கமாக வரும் இந்தியா்களை மீட்க உதவி மையங்களை இந்திய தூதரகங்கள் அமைத்துள்ளன. இந்த நிலையில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்டில் இருந்து 219 இந்தியர்களுடன் ஏர் இந்தியா விமானம் மும்பை வந்தடைந்தது. மும்பை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

முன்னதாக 219 இந்தியர்களும் சாலை மார்க்கமாக உக்ரைன்-ருமேனியா எல்லை வழியாக ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் அழைத்துவரப்பட்டு பின்னர் அங்கிருந்து இந்தியா திரும்பினர். இதேபோல் ஹங்கேரியில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் நள்ளிரவு 2 மணிக்கு தில்லி வரவுள்ளது. தில்லிக்கு வரும் 2ஆவது விமானத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 மாணவர்கள் வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.