5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. இதற்காக 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழகத்தில் இன்று 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளது.

இம்மையங்களில் 47.36 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை முகாம் நடைபெறவுள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் கோவிட் தொற்று இருந்தால் மையங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது அவசியம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும் என்றும் சொட்டு மருந்து போடாமல் விடுபடும் குழந்தைகளை கண்டறிய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொட்டு மருந்து போடும் பணியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.