என் மரணத்திற்காக அரசியல் எதிரிகள் பிரார்த்தனை.. வாரணாசியில் பிரதமர் மோடி உருக்கம்

தனது மரணத்திற்காக அரசியல் எதிரிகள் காசியில் பிரார்த்தனை செய்ததாக குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, காசியில் நடந்த இந்த பிரார்த்தனையால் தான் திருப்தி அடைவதாகவும், இறக்கும் வரை காசியை விட்டு தானோ, தன்னை விட்டு காசியோ பிரியாது என்று உருக்கமாக குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 5 கட்டங்கள் முடிந்துவிட்ட நிலையில், மார்ச் 3ம் தேதி 6வது கட்ட வாக்குப்பதிவும், மார்ச் 7ம் தேதி 7வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜகவுக்கு வாக்கு சேகரித்து பிரதமர் நரேந்திர மோடி பஸ்தி, தியோரியா மற்றும் வாரணாசி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, உக்ரைனில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்களை அழைத்து வருகிறோம். எங்கள் மகன்கள் மற்றும் மகள்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதிசெய்ய நாங்கள் இரவும் பகலும் உழைத்து வருகிறோம்; என்று குறிப்பிட்ட மோடி, இந்தியாவை பலப்படுத்துவதற்கான நேரம் இது என்றும் இருப்பினும், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் கமிஷனில் வாழும் அந்த வம்சத்தினர் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் கூறினார்.

வாரணாசியில் பேசிய மோடி,’ நான் யாரைப் பற்றியும் தனிப்பட்ட கருத்துக்களைச் சொல்ல விரும்பவில்லை, ஆனால் எனது மரணத்திற்கான விருப்பங்கள் பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டபோது, நான் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் உணர்ந்தேன். இறக்கும்வரை காசியை விட்டு நானோ என்னை விட்டு காசியோ பிரியாது என்பதுதான் இதன் பொருள்’ என அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி திட்டங்களை தொடங்கி வைக்க, திட்டங்களை அறிவிக்க என தொடர்ந்து வாரணாசிக்கு வருவதை குறிப்பிட்டு, ‘மக்கள் தங்கள் கடைசி காலத்தில்தான் வாரணாசிக்கு வருவார்கள்’ என்று சமாஜ்வாதி கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார். பாஜகவின் இறுதி காலத்தை குறித்தே அவர் கூறியதாக சமாஜ்வாதி கட்சியினர் கூறினாலும், பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் பேச்சு அகிலேஷ் யாதவை நேரடியாக தாக்கும் விதத்தில் அமைந்தது.

Leave A Reply

Your email address will not be published.