அரசை வீட்டுக்கு விரட்டியடிக்க மக்கள் தயார்! – இராதா எம்.பி. கூறுகின்றார்.

“இந்த நாட்டிலே எதை எடுத்தாலும் ‘இல்லை’ என்றதொரு நிலைமையே உருவாகியுள்ளது. இதற்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும். இப்படியானதொரு நிலைமை உருவாக்கிய அரசை வீட்டுக்கு அனுப்ப நாட்டு மக்கள் தயாராகிவிட்டனர்.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, நீண்டநேர மின்வெட்டு, பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஹட்டனில் நேற்று (06) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் பெற்றோல் இல்லை. டீசலும் இல்லை. மின்சாரமும் இல்லை. இவை இல்லாததால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை. அதனால் முதலீட்டாளர்களுக்கு வருமானம் இல்லை. ஊழியர்களுக்குச் சம்பளமும் இல்லை. அரிசி வாங்கக் காசு இல்லை. குடிப்பதற்குப் பால்மாவும் இல்லை. நாட்டில் எதற்கெடுத்தாலும் இவ்வாறு ‘இல்லை’ என்றதொரு நிலைமையே உருவாகியுள்ளது.

அனைத்து வழிகளிலும் இந்த அரசு நாட்டு மக்களை வதைத்துக்கொண்டிருக்கின்றது. எனவே, இந்த அரசு பெரும் சாபக்கேடாகும். இந்த அரசை விரட்டியடிக்க மக்கள் தயாராகிவிட்டனர். நாமும் அதற்குப் பேராதரவை வழங்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நிச்சயம் நாம் நாட்டையும், மக்களையும் காப்போம். அதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.