ஏப்ரல் 7ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் – பி.ஆர். பாண்டியன் தகவல்

உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136அடியாக குறைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் உரையாற்றிய கேரள மாநில ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பிஆர் பாண்டியன் தேனியில் தெரிவித்தார்.

முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டும் திட்டம் தடுக்க வேண்டும், அணையின் நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மார்ச் 15ல் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. அந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் பிரச்சாரம் பயணம் இன்று தேனியில் நடைபெற்றது.

இதற்காக தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பிரச்சாரக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறுகையில், பாலாற்றில் அணை கட்டச் சொல்லி ஆந்திர அரசையும், மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு ஆதரவாகவும், கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை என தமிழகத்தின் நீராதாரங்களை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது.

தென்னிந்தியாவின் நீராதார ஒற்றுமையை சீர்குலைக்கும் மத்திய அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டு சேர்ந்து தமிழகத்தை வஞ்சிங்கிறது. குறிப்பாக தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கேரளாவில் உள்ள அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியும் கூட்டு சேர்ந்து முல்லைப் பெரியாறு அணையில் அடாவடி செயலில் ஈடுபட்டுள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்த விடாமல் அங்குள்ள அமைச்சர்கள் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுகின்றனர்.‌

அணையின் நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்துவதற்கு தடையாக உள்ள பேபி அணையை பலப்படுத்துவதற்கு தொடர்ந்து முட்டுக் கட்டை போட்டு வருகிறது.‌ முல்லைப் பெரியாறு அணையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெற்றுத்தந்த தமிழகத்தின் உரிமையை கேரள அரசு பறிக்க நினைக்கும் நேரத்தில் திமுக அரசு வீறுகொண்டு எழ வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136அடியாக குறைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் உரையாற்றிய கேரள மாநில ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது. எனவே கேரள மாநில ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாகக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.