நடக்கப் போவது உயிரியல் ஆயுத போரா? : சண் தவராஜா

உக்ரைன் மீதான ரஸ்யப் படையெடுப்பைத் தொடர்ந்து அமெரிக்க தலைமையிலான மேற்குலகம் மேற்கொள்ளும் செயற்பாடுகளைப் பார்க்கும் போது பரவசமாக இருக்கிறது. ஒரு நீதியான, ஜனநாயகத் தன்மை மிக்க ஒரு உலகம் இருக்குமானால், அது இவ்வாறுதான் இருக்க வேண்டும் என நினைக்கும் அளவுக்கு, ஒரு ஆக்கிரமிப்பு நாட்டின் மீது எத்துணை தூரம் நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அத்துணை தூரம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போரினைத் தொடங்கிய நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆகட்டும், போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வெளியேறும் மக்களை இருகரம் நீட்டி வரவேற்பதாக இருக்கட்டும், ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் நாட்டுக்கு வாரி வழங்கப்படும் உதவிகள் ஆகட்டும், ஐக்கிய நாடுகள் சபையில் அடுத்தடுத்து கொண்டுவரப்படும் தீர்மானங்கள் ஆகட்டும், ஊடக உலகின் பேசுபொருளாகட்டும்… இது கனவா இல்லை நனவா எனச் சந்தேகப்படும் வகையிலேயே அனைத்தும் அமைந்திருக்கின்றன.

அதேவேளை, கடந்த காலங்களில் ரஸ்யாவைப் போன்று அமெரிக்காவும், நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளும் உலகின் பல நாடுகளில் படை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, ஆக்கிரமிப்பு யுத்தங்களை நடத்தியபோது, இன்று களத்தில் நிற்கும் நியாயவான்கள் எங்கே போயிருந்தார்கள் எனக் கேட்கத் தோன்றுகிறது. முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் உலகின் மீது திணிக்கப்பட்ட போர்கள். ஒரு நாட்டின் மீதோ, நாடுகளின் மீதோ போர் திணிக்கப்படும் போது இயல்பாகவே அந்தப் போரை எதிர்க்க வேண்டிய தேவை உருவாகின்றது. அந்த வேளைகளிலே போர்களை நடாத்துவதற்கான நியாயப்பாடும் உருவாகி விடுகின்றது.

ஆனால், இரண்டாம் உலகப் போரின் பின்னால் நடைபெற்ற கொரிய யுத்தம் முதல், இறுதியாக நடைபெற்ற சிரிய யுத்தம் வரை அமெரிக்கா மேற்கொண்ட போர்கள் எவையும் இத்தகைய எதிர்வினையாக நிகழ்த்தப்பட்ட போர்கள் அல்ல. மாறாக, தனது கொள்கையை மற்றவர்கள் மீது திணிப்பதற்காகவும், தனது நாட்டாண்மைத்தனத்தை உறுதி செய்து கொள்வதற்காகவும் அமெரிக்காவால் வலிந்து நடத்தப்பட்ட போர்கள். இத்தகைய போரில் பல இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய கொடிய போர்களின் விளைவாக உருவான சூழ்நிலைகளால் இன்றுவரை மக்கள் இறந்து கொண்டே இருக்கின்றனர்.

இத்தகைய போர்களை அமெரிக்கா ஆரம்பித்த வேளைகளில் இன்று ரஸ்யாவுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் எந்தவொரு அணுகுமுறையையும் உலகம் கைக்கொண்டிருக்கவில்லை. இன்று பாதிக்கப்படும் நிலையில் உள்ள ரஸ்யா கூட அத்தகைய முயற்சி எதனையும் மேற்கொண்டிருக்கவில்லை.

ஒரு நாடாக உருவான நாள் முதலாகப் போரை நடத்திக் கொண்டிருக்கும், அயல் நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும், அடுத்தடுத்துக் கொண்டுவரப்பட்ட ஐ.நா. தீர்மானங்களைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுக் கம்பீரமாக உலக அரங்கில் வலம்வரும் இஸ்ரேல் மீது மருந்துக்குக் கூட இத்தகைய நடவடிக்கைகள் எதுவும் இன்றுவரை எடுக்கப்பட்ட வரலாறு இல்லை. மாறாக, இன்று ரஸ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துக் கொண்டிருக்கும் நாடுகளே, இஸ்ரேலுக்குப் பகிரங்கமாகப் பொருளாதார உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்றன. ரஸ்யாவின் உக்ரைன் மீதான போரைக் கண்டித்து, அந்த நாட்டில் இருந்து வெளிநடப்புச் செய்த வர்த்தக நிறுவனங்கள் ஒன்றுகூட இஸ்ரேலின் நடவடிக்கைகள் தொடர்பில் வெறுமனே கண்டனம் கூடத் தெரிவிப்பதில்லை.

எதனால் இந்த இரட்டை நிலைப்பாடு? எம்முன்னே இருப்பது ஒரே உலகம் என்றால் ஏன் ரஸ்யா விடயத்தில் உலகம் ஒரு மாதிரியாகவும், அமெரிக்கா மற்றும் அமெரிக்க சார்பு நாடுகள் விடயத்தில் வேறு ஒரு மாதிரியாகவும் செயற்பாடுகள் உள்ளன. இத்தகைய போக்கைத் தீர்மானிப்பது யார்?

இத்தகைய இரட்டை நிலைப்பாடு நாடுகள் விடயத்தில் மாத்திரமன்றி மனிதர்கள் விடயத்தில் கூடக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதைப் பார்க்கின்றோம். உக்ரைன் போரில் கூட அதனைக் காண முடிகின்றது. போரில் இருந்து தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அகதிகளாக உக்ரைனில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் மக்களில் வெள்ளை நிறத்தவர்கள் தவிர மற்றவர்களை சில நாடுகள் வரவேற்கத் தயங்குவதைப் பார்க்க முடிகின்றது. உயிர் காப்பதில் கூட, மக்களின் தேசம், நாடு, மொழி போன்றவை கவனத்தில் கொள்ளப்பட்டு பாகுபாடு காட்டப்படுகின்றது என்றால், நாம் எத்தகைய உலகத்தில் வாழ்கிறோம் என்ற கேள்வி எழுகின்றது. மனிதர்களில் வெள்ளை நிறத்தவர்களுக்கு மாத்திரமே இந்த உலகம் சொந்தமானதா? அல்லது ஏனைய நிற மக்களை விடவும் அவர்களுக்கு விசேட சிறப்புரிமைகள் உள்ளனவா எனக் கேட்கத் தோன்றுகின்றது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது வெற்றுச் சொல்லாடல் மட்டும்தானா? மனித உரிமைகள் அனைவருக்கும் பொதுவானவை என்ற கூற்று வெறும் பசப்பு வார்த்தைதானா? நிச்சயமாக இவை விடை தெரியாத கேள்விகள் அல்ல. ஆனால், கேள்விகள் கூட யாரால், யாரை நோக்கிக் கேட்கப்படுகின்றன என்பதில்தான் விடயம் அடங்கியுள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் உக்ரைன் போரில் உண்மை யார் பக்கம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, அதன் அறிக்கைகள் எதுவும் நம்பகத் தன்மை அற்றவை என்பது சதாம் ஹுசைன் விடயம் முதல் பல தடவைகள் நிரூபிக்கப்பட்டு விட்டாலும், ஊடகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தான் சொல்வது யாவும் உண்மை என நிறுவுவதில் அமெரிக்கா வெற்றி கண்டு வருவதைப் பார்க்க முடிகின்றது. உக்ரைன் விடயத்தில் கூட அமெரிக்கா வழங்கிய “முன்னைநாள் சோவியத் குடியரசுகளை நேட்டோவில் இணைத்துக் கொள்வதில்லை” என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. இது பற்றி அமெரிக்காவிடம் கேள்வி கேட்க யாரும் இல்லாத நிலையையே அமெரிக்கா வைத்திருக்கின்றது.

தற்போது புதிய ஒரு விடயத்தை ரஸ்யா வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. உக்ரைனில் அமெரிக்க உதவியுடன் உயிரியல் ஆயுதங்கள் தயாரிக்கப்படுகின்றன என்ற தகவலை ரஸ்யா வெளியிட்ட உடனேயே அமெரிக்கத் தரப்பில் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி அமெரிக்க சார்பு ஊடகங்கள் கூட முண்டியடித்துக் கொண்டு மறுப்புக்களை வெளியிட்டு வருவதைப் பார்க்க முடிகின்றது. ஆனால், ரஸ்யப் படையினர் இது தொடர்பில் சில ஆவணங்களைக் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளனர். மறுபுறம், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இந்த விடயத்தில் ஓரளவு உண்மை இருக்கலாம் என்பதை உறுதி செய்துள்ளது. நோய்களைப் பரப்பக் கூடிய கிருமிகள் தொடர்பான ஆய்வு நிலையங்கள் உக்ரைனில் இயங்குவதை உறுதி செய்துள்ள உலக சுகாதார நிறுவனம், இவற்றை மூடுமாறு தாம் பரிந்துரை செய்ததாகத் தெரிவித்துள்ளது. ஆனால், இவை மூடப்பட்டனவா என்பது உறுதி செய்யப்படவில்லை.

அதேவேளை, அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான இணைச் செயலாளர் விக்ரோறியா நுலான்ட், அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகாரங்களுக்கான குழுவில் மாரச் 8ஆம் திகதி சாட்சியமளிக்கையில் உயிரியல் ஆய்வு கூடங்கள் அமெரிக்க உதவியுடன் உக்ரைனில் இயங்குவதை ஒத்துக் கொண்டுள்ளார். அது மாத்திரமன்றி அவை ரஸ்யாவின் கைகளில் கிடைப்பதைத் தடுக்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார். இது தொடர்பில் அவசரக் கூட்டமொன்று ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கூட்டப்பட்ட வேளையில், உயிரியல் ஆய்வுகூடம் தொடர்பிலான செய்திகளை அமெரிக்கா முழுவதுமாக மறுத்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போர் விடயத்தில் உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு சாமானிய மக்கள் காத்திருக்க வேண்டிய நிலையே உள்ளது. அது எவ்வளவு காலம் என்பதுதான் மிகவும் பெறுமதியான கேள்வி.

Leave A Reply

Your email address will not be published.