ஆசிய நாடுகளில் வேகமெடுக்கும் கொரோனா.

2 ஆண்டுகளுக்கு முன்பு உலக நாடுகளை தனது கோர கரங்களால் இறுக்கிய கொரோனா இன்னமும் பிடியை தளர்த்தாமல் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி எனும் பேராயுதம் கொண்டு கொரோனாவை முற்றாக ஒழிக்க போராடி வந்தாலும், அந்த கொடிய வைரஸ் ஒவ்வொரு முறையும் உருமாற்றம் அடைந்து தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்திக்கொண்டே வருகிறது.

அந்த வகையில் தற்போது ஆசிய நாடுகளில் கொரோனா மீண்டும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. குறிப்பாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது.

கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவிலும், வைரஸ் பரவலின் தொடக்கத்திலேயே அதை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த தென்கொரியா மற்றும் நியூசிலாந்திலும் சமீபத்திய வாரங்களாக தொற்று பரவல் உச்சம் தொட்டு வருகிறது.

சீனாவில் ஓராண்டுக்கு பிறகு நேற்று கொரோனா உயிரிழப்பு பதிவானது, அந்த நாட்டு மக்களிடையே வைரஸ் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தென்கொரியாவில் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 454 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. 319 பேர் தொற்றுக்கு பலியாகினர்.

இதை தொடர்ந்து அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 90 லட்சத்து 38 ஆயிரத்து 938 ஆக அதிகரித்து இருக்கிறது. உயிரிழப்பு 12 ஆயிரத்து 101 ஆக உயர்ந்துள்ளது.

நியூசிலாந்தில் நேற்று 18 ஆயிரத்து 514 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். இதன் மூலம் அந்த நாட்டின் மொத்த பாதிப்பு 4 லட்சத்து 70 ஆயிரத்தை கடந்தது.

இதே போல் தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவிலும், சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் மலேசியாவில் நேற்று 24,241 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதியானது. ஹாங்காங்கில் 20 ஆயிரத்து 79 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகினர்.

வியட்நாம் நாட்டில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு 77 லட்சத்து 91 ஆயிரத்தை கடந்தது.

Leave A Reply

Your email address will not be published.