முதன்முறையாகப் புதிய தொழில்நுட்பத்துடன் துறைமுக பிரவேச வீதிக் கட்டுமானம்…..

இங்குருகடை சந்தியில் இருந்து காலிமுகத்திடல் துறைமுக நகரம் வரையான கோபுரங்களின் மேல் நிர்மாணிக்கப்படும் துறைமுக பிரவேச வீதியை 2023ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்து மக்களிடம் கையளிக்க வேண்டும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கோபுரங்களின் மேல் நிர்மாணிக்கப்படும் துறைமுக பிரவேச வீதி தொடர்பான நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கோபுரங்கள் மேல் நிர்மாணிக்கப்படும் துறைமுக பிரவேச வீதி பணிகள் முதல் இரண்டு ஆண்டுகளில், மெதுவான இடம்பெற்றதால் அதன் நிர்மாண முன்னேற்றம் 7% வரை குறைந்து இருந்தது. எவ்வாறாயினும், 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முழுமையான நிர்மாண முன்னேற்றம் 32% ஆக இருக்கும் என்றும், இலங்கையில் முதன்முறையாகப் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பமான பாலத்தின் பாகங்களை இணைக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாக திட்டப் பணிப்பாளர் கே.டபிள்யு. கண்டம்பி அமைச்சருக்குத் தெரிவித்தார்.

கொழும்பு வர்த்தக நகரின் நுழைவாயிலில் நிலவும் கடும் வாகன நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக இங்குருகடே சந்தியிலிருந்து புதிய துறைமுக நகரம் வரையிலான கோபுரங்களுக்கு மேல் புதிய அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க நெடுஞ்சாலைகள் அமைச்சும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் திட்டமிட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் கோபுரங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது இந்த வீதியின் விசேடமாகும்.

கோபுரங்களின் மீது செல்லும் துறைமுக பிரவேச வீதியின் தூரம் 5.3 கி.மீ. களாகும். நான்கு வழிப்பாதையாக நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்குருகடே சந்தியிலிருந்து ஆரம்பமாகி காலி முகத்திடல் துறைமுக நகரத்தில் முடிவடையும் இந்த வீதியின் நிர்மாணப் பணிகளுக்கு 28,002 மில்லியன் ரூபா செலவாகும். நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் சீன சிவில் இன்ஜினியரிங் கட்டுமானக் கூட்டுத்தாபனத்தினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிவேக நெடுஞ்சாலையில் 5 நுழைவாயில்கள் இருக்கும். இங்குருகடவுக்கான நுழைவாயில், புறக்கோட்டை விமலதர்ம நிறுவனத்திற்கு அருகிலுள்ள நுழைவாயில், அலுத் மாவத்தை நுழைவாயில், காலி முகத்திடலுக்கான நுழைவாயில் மற்றும் துறைமுக நகரத்தின் நுழைவாயில் ஆகியவையாகும். இந்த அதிவேக நெடுஞ்சாலை துறைமுகத்தில் இருந்து தடையின்றி கொள்கலன் போக்குவரத்துக்கான புதிய பிரவேச வீதியாகும். இங்குருகடே சந்திக்கு அருகிலுள்ள நுழைவாயிலில், இந்த கோபுரங்களில் நிர்மாணிக்கப்படும் துறைமுக பிரவேச நெடுஞ்சாலையானது புதிய களனி பாலத்தின் மீதான வீதியுடன் இணைக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.