நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் : நாசர் விஷால் கார்த்தி அணியினர் வெற்றி..

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கத் தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷால் பொருளாளராக கார்த்தி பதவி வகித்தனர்.

அதன்பின்னர் கடந்த 2019ல் ஜூன் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது.

கடந்த 30 மாதங்களாக நடிகர் சங்கத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல் காத்து கிடந்தன.

கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், நாசர் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.
ஆனால் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால் தேர்தலை செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. இதனால் பதிவான வாக்குகள் அப்படியே எண்ணப்படாமல் இருந்தன.

தேர்தல் வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேர்தல் செல்லும் என்று அறிவித்து வாக்குகளை எண்ணவும் உத்தரவிட்டது.

அதன்பின்னர் ஏழுமலை என்ற துணை நடிகர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு இன்று மார்ச் 20 சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள குட் ஷெப்பர்ட் பள்ளி வளாகத்தில் காலை ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பாண்டவர் அணி தரப்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் போட்டியிட்டனர். சங்கரதாஸ் அணி தரப்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
மொத்தம் 29 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் ஆரம்பம் முதலே பெரும்பாலும் பாண்டவர் அணியே முன்னிலை வகித்தது.

தலைவர் பதவிக்காக போட்டியிட்ட நாசர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி, பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி கூறியதாவது ;

நடிகர் சங்க தேர்தலில் 2 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு வெற்றி கிடைத்துள்ளது . பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகள் பதவி வகிப்போம். இந்த 3 ஆண்டுகளில் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும்” இவ்வாறு கார்த்தி கூறினார்

எதிர் தரப்பில் பாக்யராஜ், ஐசரி கணேஷ் தலைமையில் போட்டியிட்ட சுவாமி சங்கரதாஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது.

தேர்தல் நாளன்று பதிவானதாக கூறிய வாக்குகளை விட வாக்குப்பெட்டியில் 138 வாக்குச்சீட்டுகள் அதிகமாக இருந்ததாக குற்றம் சாட்டியது இந்த அணி. எனவே பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் வாக்கு எண்ணிக்கையின் போதே மையத்தை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரஷாந்த் கூறியதாவது… “வாக்கு பெட்டியில் வாக்கு சீட்டுக்கள் அதிகமானது எப்படி.? இதைப்பற்றி பேச ஏன் எதிர் அணியினர் தயங்குகிறார்கள்.” என கூறினார்.

சங்கரதாஸ் அணியை சார்ந்த ஐசரி கணேசனும் ஓய்வு பெற்ற நீதிபதி பத்பநாபனிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.