“மத்திய கிழக்கில் உள்ள இலங்கை தொழிலாளர்களை உடனடியாக அழைத்து வாருங்கள்” – ஐக்கிய மக்கள் சக்தி ஹர்ஷா

சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷா டி சில்வா , மத்திய கிழக்கில் உள்ள இலங்கை தொழிலாளர்களை இலங்கைக்கு உடனடியாக அழைத்து வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளேன் என இன்று (07) ஹங்வெல்லவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும் பேசிய டாக்டர் ஹர்ஷா டி சில்வா, “கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்ற அரசாங்கம் மத்திய கிழக்கு மக்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை தற்போது நிறுத்தியுள்ளதாக நாங்கள் கேள்விப்படுறோம். இந்த நாட்டு மக்களை உடனடியாக திரும்ப அழைத்து வருமாறு நாங்கள் அரசாங்கத்தை கோருகிறோம் என்றார்.

இப்போது வெளிநாடுகளில் உள்ள எங்கள் தூதரகங்களில் உள்ள அதிகாரிகள் தம்மை பாதுகாத்துக் கொள்ள காவல்துறையை நிறுத்தியுள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக பிரதி வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்ததால், அவாகளது நிலைமையை நான் நன்கு அறிவேன். எனவே, அங்குள்ள நிலைமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம்.

மத்திய கிழக்கில் உள்ள எங்கள் மக்கள் ஆண்டுதோறும் அதிக அளவு டொலர்களைக் கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, கடந்த ஆண்டு மட்டும், 7 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது, ஆனால் எங்கள் பொருட்களின் ஏற்றுமதி 11 பில்லியன் டொலர்கள் மட்டுமேயாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது வெளிநாட்டினரின் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்த அரசாங்கம், தற்போது தேர்தல் முடியும் வரை மத்திய கிழக்கு நாடுகளில் பரிதவித்துப் போய் உள்ள எமது மக்களை நாட்டிற்கு அழைத்து வருவதைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக நாங்கள் அறிகிறோம். இந்நேரத்தில் அவர்களை அழைத்து வருவது அவர்களுக்கு பாதகமாகலாம் என அரசு கருதுகிறது. நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் அரசாங்கத்திற்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் அவர்கள் எங்கள் தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வர தேர்தல் முடியும் வரை பிற்போட்டுள்ளனர்.

வெளியில் உள்ள மக்களை நம் நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்கான அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. 17 ஆம் திகதி பிலிப்பைன்ஸிலிருந்து ஒரு குழுவைக் கொண்டுவருவதற்காக ஒரு விமானத்தை ஒதுக்கியுள்ளதாக அறிய முடிகிறது. அதன்பின்னர் எந்தவொரு விமானமும் மக்களை கொண்டு வர ஒதுக்கப்படவில்லை .

தினசரி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக வெளியில் இருக்கும் மக்களை அழைத்து வருவதை நிறுத்தியுள்ளதாக நாம் அறிகிறோம். சராசரியாக, நம் மக்களில் சுமார் 17 லட்சம் பேர் வெளிநாடுகளில் வேலை செய்கிறார்கள். வருடாந்தம் 2 லட்சம் பேர் வெளிநாடுகளில் வேலை செய்ய செல்கிறார்கள். சமீபத்திய அறிக்கையின்படி, இந்த கோவிட் தொற்று நோயால் நம் நாட்டில் சுமார் 35,000 பேர் வேலை இழந்துள்ளனர். ஒரு அரசாங்கமாக நாம் மக்களைக் கவனிக்க வேண்டும். அவர்கள் நம் நாட்டின் மக்கள் என்பதை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.

எமக்கு தெரிந்தவகையில் 40 ஆயிரம் பேர் மீண்டும் தங்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து செல்லுமாறு இப்போதைய அரசாங்கத்திடம் அங்குள்ள மக்கள் கெஞ்சியுள்ளதாக எங்களுக்கு செய்தி கிடைத்து உள்ளது. அவர்களுக்கு எங்கும் செல்ல முடியவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் வேலைக்கு சென்ற அநேக பெண்கள் தத்தளித்துப் போய் உள்ளனர். அவர்கள் மிலியன் கணக்காக டொலர்களைக் கொண்டு வரும் போது மகிழ்வோடு வரவேற்றவர்கள் , இப்போது அவர்களை இங்கு அழைத்து வர வேண்டாம் என்று பாராமுகமாக இருக்க முடியாது. இந்த அரசாங்கம் அவர்களுக்கு பொறுப்பல்லவா? என்பதே இன்றைய பிரச்சினை….

அந்த நபர்களை அழைத்து வந்தால் அவர்கள் எவ்வாறு தனிமைப்படுத்த முடியும் என்று நீங்கள் கேட்கலாம்.அது ஒரு தனி கேள்வி. முதலில் அவர்களை நாட்டுக்கு அழைத்து வர வேண்டும். சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் தற்போது மூடப்பட்டிருக்கும் ஹோட்டல்களில் அவர்களை தங்க வைக்க முடியும். வாடகை அதிகமான பெரும் ஹோட்டல்களில் அவர்களை தங்க வைக்கச் சொல்லவில்லை. சிறிய ஹோட்டல்களில் பேசி அவர்களை தங்க வைக்க முடியும். எனவே வெளிநாட்டு அமைச்சு உடனடியாக தலையிட்டு வெளிநாடுகளில் உள்ளோரை இங்கு கொண்டு வந்து அவர்களை தனிமைப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அங்கு தூதரக அதிகாரிகளை பாதுகாத்துக் கொள்ள போலீசாரை ஈடுபடுத்தியிருப்பது வேதனையளிக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments are closed.