ராஜபக்ச அரசை உடன் வீட்டுக்கு விரட்டுவோம் : நுகேகொடை போராட்டத்தில் அநுரகுமார

“தம்மால் முடியாது என்பதை இந்த ஆட்சியாளர்கள் அனைத்து விதத்திலும் நிரூபித்துவிட்டதால், வீட்டுக்கு செல்லுங்கள் என நாட்டு மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே, இந்த ராஜபக்ச ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கு நாமும் தயார்.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் அரச எதிர்ப்புப் பேரணியும் போராட்டமும் இன்று மாலை நுகேகொடையில் இடம்பெற்றது.

தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும், நாட்டில் தலைதூக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தியுமே இந்தப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரமுகர்களும், பெருந்திரளான மக்களும் பங்கேற்றிருந்தனர். இதனால் நுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
இதில் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. மேலும் கூறியவை வருமாறு:-

“ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இன்று சர்வகட்சி மாநாடு நடைபெற்றது. நாட்டு வளங்களைக் கொள்ளையடித்த பஸில், மத்திய வங்கியைக் கொள்ளையடித்த ரணில், தரகுப்பணம் வழங்கிய கப்ரால் உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றனர். இவர்களுடன் என்ன பேச – கலந்துரையாட முடியும்? நாங்கள் சென்றிருந்தால், கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள் என்பதையே கூறியிருப்போம்.

நிர்வாகக் கட்டமைப்பில் ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடுகின்றன. கடந்த 70 ஆண்டுகளில் நாட்டைச் சீரழித்துவிட்டனர். முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் ஊழல்கள் பற்றி கருத்துகளை வெளியிட்டுக்கொள்கின்றனர். இதுதான் எமது நாட்டு அரசியல். அவர்கள் இவர்களைப் பற்றியும், இவர்கள் அவர்களைப் பற்றியும் குறைகூறுவது வேடிக்கையாகிவிட்டது.

எனவே, ராஜபக்ச ஆட்சியை விரட்டியடிப்பது மட்டுமல்ல, புதியதொரு கலாசாரத்தை உருவாக்கும் பொறுப்பும் எமக்கு உள்ளது. மக்கள் சக்தி மூலம் ஆட்சியை விரட்ட முடியும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.