ஸ்டார்க் வேகத்தில் சுருண்டது பாகிஸ்தான்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் லாகூரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 391 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. அப்துல்லா ஷஃபிக் 45 ரன்களுடனும், அசார் அலி 30 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து மூன்றாம் நாள் ஆட்டத்திலும் ஷஃபிக், அலி இணை மேற்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதத்தைக் கண்டனர். ஷஃபிக் 81 ரன்கள் எடுத்த நிலையில், நாதன் லயான் சுழலில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, அசார் அலியுடன் இணைந்து பாபர் அஸாமும் பாட்னர்ஷிப் அமைத்தார். பெரிய பாட்னர்ஷிப்பாக மாற வேண்டிய நேரத்தில் அசார் அலி, பேட் கம்மின்ஸ் வேகத்தில் அவரிடமே கேட்ச் ஆனார்.

இதன்பிறகு, ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் தங்களது மிரட்டலைத் தொடர்ந்தனர். ஃபவாத் அலாம் 13 ரன்களுக்கும், அவரைத் தொடர்ந்து களமிறங்கியவர்கள் 10 ரன்களைக்கூடத் தொடாமலும் ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்து ஆறுதல் அளித்து வந்த கேப்டன் பாபர் அஸாம் 67 ரன்களுக்கு 9ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

அதே ஓவரில் நசீம் ஷாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி 8 விக்கெட்டுகளை பாகிஸ்தான் அணி 54 ரன்களுக்குள் இழந்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 123 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்து 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.