வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மணியடிக்க தயாராகுங்க…மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு

கடந்த ஐந்து நாள்களில் நான்காவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மூல பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. இதை கடுமையாக விமரிசித்துள்ள காங்கிரஸ், பொது மக்களிடமிருந்து வெட்கமே இல்லாமல் கொள்ளையடிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என சாடியுள்ளது.

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மார்ச் 31ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “வரும் மார்ச் 31ஆம் தேதி, காலை 11 மணிக்கு வீடுகளுக்கு வெளியேயும் பொது இடங்களிலும் கேஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்தும் டிரம்ஸ், மணி உள்பட இசை கருவிகளை அடித்தும் மக்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.

எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து செவிடாக உள்ள பாஜக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்படவுள்ளது” என்றார்.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் பாஜக அரசு 26 லட்சம் கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாகவும் காங்கிரஸ் விமரிசித்துள்ளது. இந்த நிலையில், மார்ச் 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 7ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, எரிபொருள் விலை உயர்வை கண்டித்த ராகுல் காந்தி, “மாளிகைக்காக மன்னர் தயாராகி கொண்டிருக்கிறார். ஆனால், பணவீக்கம் என்ற சுமையை மக்கள் சுமந்து கொண்டிருக்கின்றனர்” என விமரிசித்திருந்தார்.

கரோனா பரவ தொடங்கியதையடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கை தட்டவும் மணி, டிரம்ஸ் உள்ளிட்ட கருவிகளை அடிக்கும்படியும் மோடி மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று கொண்ட மக்கள், வீடுகளின் மாடிகளிலும் வாசல்களிலும் நின்று மணி அடித்தனர். இதே பாணியை தற்போது காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.