ஸாம்பா சுழலில் சுருண்டது பாகிஸ்தான்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது.

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி லாகூரில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீச முடிவெடுத்தார்.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ட்ராவிஸ் ஹெட் – ஆரோன் ஃபிஞ்ச் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஃபிஞ்ச் ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ட்ராவிஸ் ஹெட் அதிரடியில் மிரட்டினர்.

23 ரன்களில் ஆரோன் ஃபிஞ்ச் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பென் மெக்டர்மோட்டும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ட்ராவிஸ் ஹெட் சதம் விளாசி அசத்தினார். அவருக்கு துணையாக பென் மெக்டர்மோட்டும் அரைசதம் கடந்தார்.

அதன்பின் சதம் விளாசிய கையோடு ட்ராவிஸ் ஹெட் ஆட்டமிழக்க, 55 ரன்களில் பென் மெக்டர்மோட்டும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்
.
இறுதியில் கேம்ரூன் க்ரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராவூஃப் மற்றும் ஸாஹித் மஹ்மூத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஃபகர் ஸமான் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

பின்னர் இமாம் உல் ஹக்குடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் ஆசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், பார்ட்னர்ஷிப் முறையில் 96 ரன்களையும் சேர்த்தனர்.

அதன்பின் 57 ரன்களில் பாபர் ஆசாம் ஆட்டமிழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இமாம் உல் ஹக் சதம் விளாசிய கையோடு 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.

இதனால் 45.2 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு உதவினார்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் சதம் விளாசியதுடன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ட்ராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.