பரபரப்பான போட்டியில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

15வது ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியான போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக சிம்ரன் ஹெட்மயர் 59* ரன்களும், தேவ்தட் படிக்கல் 29 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ அணிக்கு கே.எல் ராகுல் (0), டி காக் (39), கிருஷ்ணப்பா கவுதம் (0), ஜேசன் ஹோல்டர் (8), அயூஸ் பதோனி (5) போன்ற நட்சத்திர வீரர்கள் பெரும் ஏமாற்றம் கொடுத்தனர். ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் அபார வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீடீரென போட்டியின் 19வது ஓவரில் ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாடிய 18 ரன்கள் குவித்தார், இதனால் கடைசி ஒரு ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன ஸ்டோய்னிஸிற்கு எதிராக அறிமுக வீரரான குல்தீப் சென்னை ராஜஸ்தான் அணி பந்துவீச வைத்தது, போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இந்த கடைசி ஓவரின் முதல் நான்கு பந்தையும் குல்தீப் சென் மிக மிக சிறப்பாக வீசி ஸ்டோய்னிஸை கட்டுப்படுத்தியதன் மூலம், ராஜஸ்தான் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தநிலையில், பரபரப்பான இந்த போட்டியில் மிரட்டல் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சமூக வலைதளங்களில், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. ராஜஸ்தான் அணியின் இந்த வெற்றிக்கு காரணமான குல்தீப் சென், சாஹல், ஹெட்மயர் போன்ற வீரர்களை முன்னாள் வீரர்கள் பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.