குஜராத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய டில்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி.

குஜராத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி பந்தில் அசத்திய டில்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் டில்லி, குஜராத் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற குஜராத் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

டில்லி அணிக்கு பிரேசர்-மெக்குர்க் (23) ஆறுதல் தந்தார். பிரித்வி ஷா (11), ஷாய் ஹோப் (5) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய அக்சர் படேல் (66) அரைசதம் கடந்தார். மோகித் பந்தை சிக்சருக்கு அனுப்பிய கேப்டன் ரிஷாப் பன்ட், 34 பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய பன்ட், மோகித் வீசிய கடைசி ஓவரில் 4 சிக்சர் உட்பட 31 ரன் விளாசினார்.

டில்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 224 ரன் எடுத்தது. பன்ட் (88 ரன், 8 சிக்சர், 5 பவுண்டரி), டிரிஸ்டன் (26) அவுட்டாகாமல் இருந்தனர். குஜராத் சார்பில் சந்தீப் வாரியர் 3 விக்கெட் சாய்த்தார்.

சவாலான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு கேப்டன் சுப்மன் கில் (6) ஏமாற்றினார். சகா (39) ஓரளவு கைகொடுத்தார். அஸ்மதுல்லா (1) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய சாய் சுதர்சன் (65) அரைசதம் கடந்தார். ஷாருக்கான் (8), டிவாட்டியா (4) சோபிக்கவில்லை.

நார்ட்ஜே வீசிய 17வது ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய டேவிட் மில்லர், 21 பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 55 ரன்னில் அவுட்டானார். சாய் கிஷோர் (13) நிலைக்கவில்லை.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டன. முகேஷ் குமார் பந்துவீசினார். முதலிரண்டு பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித் கான், அடுத்த இரு பந்துகளை வீணடித்தார். ஐந்தாவது பந்தை சிக்சருக்கு அனுப்பிய இவர், கடைசி பந்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 220 ரன் எடுத்து தோல்வியடைந்தது. ரஷித் கான் (21) அவுட்டாகாமல் இருந்தார். டில்லி சார்பில் ராசிக் சலாம் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட் வென்றார்.

Leave A Reply

Your email address will not be published.