250 புலனாய்வாளர்கள் காலிமுகத்திடலுக்குள் இறக்கப்பட்டுள்ளனர்!

கடந்த இரண்டு நாட்களில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும் காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் பாரிய ஆர்ப்பாட்டத்தை கண்காணிப்பதற்காக 250 இற்கும் மேற்பட்ட புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றும் (11) இதே எண்ணிக்கையை பணியில் அமர்த்துமாறு உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அரச புலனாய்வுப் பிரிவினர், பொலிஸ் விசேட பணியகம், மேற்குப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் நுகேகொட புலனாய்வுக் கண்காணிப்புப் படையணி என்பன இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

அதிகளவான மக்கள் கலந்துகொண்டிருந்தமையினால், கல்கிசை, களனி, நுகேகொட, கொழும்பு வடக்கு, நீர்கொழும்பு, களுத்துறை மற்றும் பாணந்துறை ஆகிய பிரிவுகளில் இருந்து பெருமளவிலான கலகத் தடுப்புப் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் என இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.