இம்ரான்கானின் பதவிக்கு உக்ரைன் போர் உலை வைத்ததா? : சண் தவராஜா

உக்ரைன் போரைத் தவிர்த்து வேறெந்தத் தலைப்புச் செய்திகளும் உலக அரங்கில் தற்சமயம் இல்லை. இந்தக் கட்டுரை எழுதப்படும்போது இறுதியாக வெளிவந்த செய்தி ‘ஐ.நா. மனித உரிமைச் சபையில் இருந்து ரஸ்யா வெளியேற்றப்பட்டதாக’ உள்ளது. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது உள்ளூர் சனசமூக நிலையம், கிராம அபிவிருத்திச் சங்கம், அரிமா சங்கம், ரோட்டரிக் கழகம் என்பவற்றில் இருந்து கூட ரஸ்யா வெளியேற்றப்பட்ட செய்தியை நீங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கலாம். அந்த அளவிற்கு ரஸ்யா மீதான வெறுப்பு ஊடகங்களில் தொடர்ச்சியாகக் கக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ரஸ்ய வெளியுறவு அமைச்சர் கூறியதைப் போன்று “உலகின் வரலாற்றில் இருந்து ரஸ்யாவை ஒட்டுமொத்தமாக நீக்கி விடுவதே மேற்குலகின் திட்டம்” என்பது உண்மையோ என நினைக்கும் வகையிலேயே காரியங்கள் நடந்தேறி வருவதைப் பார்க்க முடிகின்றது.


பாகிஸ்தானில் ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. தலைமை அமைச்சர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் நம்பிக்கை இல்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவை உதவிச் சபாநாயகர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அறிவித்து இருந்தார். இந்த முடிவை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றில் எதிர்க் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் – எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே – உதவிச் சபாநாயகரின் முடிவு செல்லாது என அறிவித்துள்ள நீதிமன்றம் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சில வேளைகளில் இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது நாடாளுமன்றம் கூட்டப்பட்டிருக்கக் கூடும். இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெற்று அவர் பதவியை இழந்திருக்கக் கூடும்.

இம்ரான் கானின் வார்த்தைகளில் இருந்து புரிந்து கொள்வதானால் அவரைப் பதவியில் இருந்து அகற்ற முயற்சி செய்த ஒரு வல்லரசு ஈற்றில் வெற்றி பெற்றிருக்கின்றது. உலகின் பல நாடுகளில் தான் விரும்பியவாறு ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய அந்த வல்லரசு பாகிஸ்தானிலும் (தற்போதைய நிலையில்) தனக்குப் பிடித்தமில்லாத ஒருவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு, தனக்குப் பிடித்தமான, தனது சொல்கேட்டு நடக்கக்கூடிய ஒருவரை தலைமை அமைச்சராக நியமித்துக் கொண்டுள்ளது எனத் தைரியமாகச் சொல்லிவிட முடியும். அடுத்தடுத்து வரும் நிகழ்வுகளில் இருந்து அதனைப் பார்வையாளர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் முடியும்.

May be a cartoon
பாகிஸ்தானில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்துக்கும் உக்ரைன் போருக்கும் இடையில் என்ன தொடர்பு என நீங்கள் சிலவேளை யோசிக்கக் கூடும். அதனைப் புரிந்து கொள்வதற்கு பாகிஸ்தானின் 75 ஆண்டுகால வரலாறு பற்றியும், உக்ரைன் போர் தொடங்கிய பெப்ரவரி 24ஆம் திகதி இம்ரான் கான் மேற்கொண்டிருந்த ரஸ்யப் பயணம் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

பாகிஸ்தானில் ஜனநாயக ஆட்சி நடப்பதாகச் சொல்லிக் கொண்டாலும், அந்த நாட்டின் உண்மையான ஆட்சியாளர் இராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே. அவரது விருப்பு வெறுப்புக்கு மாறாக அந்த நாட்டில் யாரும் – தலைமை அமைச்சர் உட்பட – செயற்பட்டுவிட முடியாது. சுதந்திரம் அடைந்த நாள் முதலாக இன்றுவரை, தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு அரசாங்கமும் தனது பதவிக் காலத்தை பூரணமாக நிறைவேற்றவில்லை. சரியாகச் சொல்வதானால் ஐந்து வருடப் பதவிக் காலத்தை நிறைவு செய்ய எந்தவொரு அரசாங்கமும் அனுமதிக்கப்படவில்லை. இந்த 75 வருடகாலப் பகுதியில் அரைவாசிக் காலம் இராணுவ ஆட்சியின் கீழேயே பாகிஸ்தான் இருந்து வந்துள்ளது.

பெப்ரவரி 24இல் இம்ரான் கான் மொஸ்கோவில் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கையில் பாகிஸ்தானின் இராணுவத் தளபதியான ஜெனரல் கமார் ஜாவேத் பஜ்வா பெல்ஜியம் நாட்டின் தலைநகரான புருசெல்ஸில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருந்தார். இதுவே பாகிஸ்தான்.

உக்ரைன் போரில் நடுநிலை வகிப்பதாக பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான் கான் அறிவித்ததைத் தொடர்ந்து அவரது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும்படி அமெரிக்கா உள்ளிட்ட 23 நாடுகள் கோரிக்கை வைத்ததாகச் செய்திகள் வெளியாகின. அதே வேண்டுகோளை பாகிஸ்தானின் இராணுவத் தளபதியும் முன்வைத்தார் என்பது செய்திகளில் வெளிவராத உண்மை.

உக்ரைன் போரில் நடுநிலை வகித்ததற்காக இம்ரான் கானை பதவியில் இருந்து அகற்ற முயற்சி நடந்ததா என்ற சந்தேகம் ஒரு சிலருக்கு எழலாம். இதை விட அற்ப காரணங்களுக்காக எல்லாம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திய எடுத்துக் காட்டுகள் பல உள்ளன. தவிர, இங்கே பிரச்சனை உக்ரைன் போரில் நடுநிலை வகித்தமை மாத்திரம் அல்ல. பாகிஸ்தானில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கும் மிக முக்கிய காரணம்.
அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகக் கருதப்பட்ட பாகிஸ்தானின் முக்கியத்துவம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னான காலப்பகுதியில் மிகவும் குறைந்துவிட்டது. பதவியேற்ற ஒன்றேகால் வருடங்களில் இம்ரான் கானுடன் ஒரு தொலைபேசி உரையாடலுக்குக் கூட ஜோ பைடன் முயற்சிக்கவில்லை. பாகிஸ்தான் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குக் கூட முறையான பிரதிபலிப்பு இருக்கவில்லை. சுதந்திரம் பெற்ற நாள் முதலாகவே பாகிஸ்தான் இராணுவம் அமெரிக்க சார்பு நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது என்பது உலகறிந்த விடயம். பாகிஸ்தானின் பரம வைரி எனக் கருதப்படும் இந்தியா முன்னர் சோவியத் ஒன்றியத்துடனும், தற்போது ரஸ்யாவுடனும் பாதுகாப்பு விவகாரங்களில் இணைந்து செயற்படுவதும் அதற்கான காரணங்களுள் ஒன்று.

மாறிவரும் சூழலில் இந்தியா அமெரிக்காவை நெருங்கிச் செல்லும் போக்கு அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அரசாங்கம் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் எதிரி நாடாகக் கருதப்படும் சீனாவுடன் நெருக்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நெருக்கம் பாகிஸ்தானிய இராணுவத் தலைமைக்கு மிகவும் உவப்பான ஒன்றாக இல்லாத போதும் பொருளாதார நெருக்கடிகளின் அடிப்படையில் அதனைச் சகித்துக் கொண்டுள்ளது. 60 பில்லியன் டொலர் பெறுமதியான சீன-பாகிஸ்தான் பொருளாதாரக் கட்டமைப்பு பாகிஸ்தானின் பொருளாதாரத் தேவைகளைப் பெரிதும் பூர்த்தி செய்கின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தைப் பாவிக்கும் அனுமதியை சீனா பெற்றுக் கொண்டுள்ளது.

இந்தக் காரணங்கள் எல்லாம் ஒன்று திரண்டே இம்ரான் கானின் பதவிப் பறிப்புக்கு வித்திட்டுள்ளது. உக்ரைன் போர் ஒரு மாதத்தையும் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ரஸ்யாவுக்கு எதிரான பரப்புரைகளும் கண்டனங்களும் அதிகரித்த வண்ணமேயே உள்ளன. உக்ரைன் விவகாரத்தில் நடுநிலை வகித்த நாடுகள் – பாகிஸ்தான் போன்று – இன்னும் பல உள்ளன. அந்த நாடுகளிலும் ஆட்சி மாற்றங்கள் நிகழுமா என்பதை அடுத்து வரும் நாட்களில் நாம் அறிந்து கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.