பரிசுத்த பாப்பரசரின் உயிர்ப்பு பெருவிழா ஊர்பி எத் ஓர்பி செய்தி

அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துக்கள்! சிலுவையில் அறையுண்டவரான இயேசு உயிர்த்துவிட்டார். அவருக்காக கண்ணீர் சிந்திய, மூடிய கதவுகளுக்குள் தங்களை முடக்கிக்கொண்ட, அச்சம் மற்றும், மனவேதனையால் நிறைந்திருந்த, அவர்கள் மத்தியில் அவர் நின்று. “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” (யோவா.20:19) என்று வாழ்த்தினார். பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். உண்மையிலேயே, அவர் ஆவி அல்ல, மாறாக, சிலுவையில் உயிர்விட்டு, கல்லறையில் வைக்கப்பட்ட அதே இயேசுவே அவர். சீடர்களின் நம்பமுடியாத கண்களுக்கு முன்பாக, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” (வ. 21) என்று மீண்டும் கூறினார்.

போர் இடம்பெற்றுவரும் இந்த உயிர்ப்புநாளில், நம் கண்களும் அவநம்பிக்கை வாய்ந்தவையாக உள்ளன. மிக அதிகமான இரத்தம், வன்முறையைப் பார்த்துள்ளோம். குண்டுவீச்சுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்வண்ணம், தங்களையே இடங்களுக்குள் அடைத்துக்கொண்டு, அச்சம் மற்றும், கடுந்துயரால் நிறைந்துள்ள, நம் சகோதரர், சகோதரிகள் பலரைப் போன்று நம் இதயங்களும் இருக்கின்றன. இயேசு, உண்மையிலேயே உயிர்த்துவிட்டாரா, அவர் மரணத்தின்மீது வெற்றிகண்டாரா என்பதை நம்புவதற்குக் கஷ்டப்படுகிறோம். அது ஒரு மாயையாக இருக்க முடியுமோ? அது நம் கற்பனையின் ஒரு கட்டுக்கதையா? என்றெல்லாம் நினைக்கின்றோம்.

காயினது உணர்வு

இல்லை. அது மாயை அல்ல. கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்களுக்கு மிகவும் விருப்பமான, “கிறிஸ்து உயிர்த்துவிட்டார்!. அவர் உண்மையிலேயே உயிர்த்துவிட்டார்!” என்ற, அவரின் உயிர்ப்பின் அறிவிப்பு எதிரொலிப்பதை, எக்காலத்தையும்விட இன்று நாம் கேட்கிறோம். எக்காலத்தையும்விட இக்காலத்தில், முடிவுறாததுபோல் தோற்றமளிக்கும் தவக்காலத்தின் இறுதியில், அவர் நமக்குத் தேவைப்படுகிறார். மிக அதிகமான உயிர்களைக் காவுகொண்ட ஈராண்டுப் பெருந்தொற்றிலிருந்து வெளிவந்துள்ளோம். நம் வலிமைகள் மற்றும், வளங்கள் ஆகிய அனைத்தையும் ஒன்றுசேர்த்து, ஒருவர் ஒருவரோடு கைகோர்த்து துன்பங்களிலிருந்து வெளிவந்த காலமாக இருக்கின்றவேளை, நமக்குள் இன்னும் காயினது உணர்வு இருப்பதை வெளிப்படுத்துகிறோம். ஆபேலை, தன் சகோதரனாகப் பார்க்காது, எதிரியாகப் பார்த்த காயின், அவனைத் தீர்த்துக்கட்டும் வழிகள் பற்றிச் சிந்தித்தான். அன்பின் வெற்றியை அனுபவிக்கவும், ஒப்புரவில் நம்பிக்கை கொள்ளவும், சிலுவையில் அறையுண்ட மற்றும் உயிர்த்த ஆண்டவர் நமக்குத் தேவைப்படுகிறார். அவர் நம் மத்தியில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று மீண்டும் கூறவேண்டியது, எக்காலத்தையும்விட இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகிறது.

கிறிஸ்துவின் காயங்கள்

இயேசுவால் மட்டுமே இதை ஆற்றமுடியும். அவர் காயங்களை, நம் காயங்களாகக் கொண்டிருக்கிறார், அதனால் இன்று, அமைதி பற்றி நம்மிடம் பேசுவதற்கு அவர் மட்டுமே உரிமையைக் கொண்டிருக்கிறார். இரு காரணங்களுக்காக, அவரது காயங்கள் உண்மையிலேயே நம் காயங்களாக உள்ளன. நம் பாவங்களால், நம் கடின இதயத்தால், நம் உடன்பிறப்பு காழ்ப்புணர்வால், அக்காயங்களை அவர் மீது நாம் சுமத்தினோம் என்பது முதல் காரணம். இரண்டாவது காரணம் என்னவென்றால், அவர் நமக்காக அக்காயங்களை ஏற்றார். தம் மகிமையான உடலிலிருந்து அவர் அவற்றை அகற்றவில்லை. அவை என்றென்றும் இருக்குமாறு அவற்றை அவர் தேர்ந்துகொண்டார். அக்காயங்கள், அவர் நம்மீது வைத்த அவரது அன்பின் அழிக்கமுடியாத முத்திரையாக, நம் மீதும், அகில உலகின் மீதும் இறைத்தந்தையின் இரக்கம் இருப்பதற்காக, அவர் இறைத்தந்தையிடம் நமக்காகப் பரிந்துபேசுவதன் நிலைத்த அடையாளமாக உள்ளன. உயிர்த்த இயேசுவின் உடலிலுள்ள காயங்கள், அன்பு எனும் ஆயுதங்களால் நமக்காகப் போரிட்டு வெற்றிகண்டதன் அடையாளம். நாம் அமைதியைக் கொண்டிருக்கவும், அமைதியில் நிலைத்திருக்கவும், இவ்வாறு அவர் தம் உடலில் காயங்களை ஏற்றார். நம்பிக்கையிழந்த நம் கண்களை அகலத் திறந்து, அவரது மாட்சிமிக்க காயங்களைத் தியானிக்கின்ற இவ்வேளையில், கடினப்பட்டுள்ள நம் இதயங்கள் உடைபட்டுத் திறக்கப்படட்டும். “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்ற உயிர்ப்புச் செய்தியை வரவேற்போம். நம் வாழ்விலும், இல்லங்களிலும், நாடுகளிலும், கிறிஸ்துவின் அமைதி நுழைவதற்கு அனுமதிப்போம்!

உக்ரைனின் அமைதிக்காக…

மிகக்கொடூரமான மற்றும், அறிவற்ற போரினாலும், வன்முறையாலும் அழிக்கப்பட்டுள்ள உக்ரைனில் அமைதி நிலவுவதாக. துன்பம் மற்றும், மரணம் ஆகியவை நிறைந்த இந்தப் பயங்கரமான இரவில், நம்பிக்கையின் புதிய விடியல் விரைவில் உதிப்பதாக! அமைதிக்காக தீர்மானம் ஒன்று இடம்பெறுவதாக. மக்கள் துன்புறும்வேளை, தசைநார்கள் முறுக்கப்படுவது முடிவுறுவதாக. போருக்கு நாம் பழக்கப்படாதிருப்போம். இல்லங்கள் மற்றும், தெருக்களில், அமைதியை நாடித்தேடுவதற்கு நம்மை அர்ப்பணிப்போம். அமைதிக்காக மக்கள் எழுப்பும் விண்ணப்பத்தை நாடுகளின் தலைவர்கள் உற்றுக்கேட்பார்களாக. “மனித இனத்தை ஒழிப்பதை நிறுத்துவோமா அல்லது, மனித சமுதாயம் போரைக் கைவிடுமா?” (ரஸ்ஸல்-ஐன்ஸ்டீன் அறிக்கை, 9, ஜூலை,1955) என்று, ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்குமுன் அறிவியலாளர்கள் முன்வைத்த நெஞ்சை வருடும் கேள்விக்கு, நாடுகளின் தலைவர்கள் செவிமடுப்பார்களாக. உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டு, நாட்டிற்குள்ளேயும், வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்துள்ள இலட்சக்கணக்கான மக்கள், பிரிக்கப்பட்டுள்ள குடும்பங்கள், தனியே விடப்பட்டுள்ள வயதுமுதிர்ந்தோர், என அனைவரையும் என் இதயத்தில் வைத்துள்ளேன். அந்நாட்டில் உயிர்வாழ்க்கை சிதைக்கப்பட்டுள்ளது, மற்றும், நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. போரினால் அநாதைகளாக்கப்பட்டுள்ள சிறாரின் முகங்களைப் பார்க்கிறேன். உலகின் பல பகுதிகளில் பசியினால் இறக்கின்ற, மருத்துவப் பராமரிப்புக் கிடைக்காத, வன்முறை மற்றும், பாலியலுக்குப் பலியாகியுள்ள, பிறப்பதற்கு உரிமை மறுக்கப்பட்ட இவ்வாறு பலவாறு துன்புறும் மற்ற சிறாரோடு, உக்ரைன் சிறாரின் முகங்களைப் பார்க்கையில், அவர்களின் வேதனையின் அழுகுரலைக் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

ஆறுதலளிக்கும் அடையாளங்கள்

போரின் வேதனைக்கு மத்தியில் ஊக்கமளிக்கும் அடையாளங்களும் உள்ளன. குடிபெயர்ந்தோர் மற்றும், புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் குடும்பங்கள் மற்றும், குழுமங்களின் கதவுகள் ஐரோப்பா எங்கும் திறக்கப்பட்டுள்ள ஆறுதல்தரும் அடையாளங்கள் தெரிகின்றன. இத்தகைய எண்ணற்ற பிறரன்புச் செயல்கள், தன்னலம், மற்றும், தனிமனிதக்கோட்பாட்டால் தாழ்த்தப்பட்டுள்ள நேரங்களில், நம் சமுதாயங்களுக்கு ஓர் ஆசிர்வாதமாக மாறியுள்ளன, மற்றும், அவை, அனைவரையும் வரவேற்பதற்கு மற்றவருக்கும் உதவுகின்றன.

மத்தியக் கிழக்கில் அமைதி

ஐரோப்பாவில் இடம்பெற்றுவரும் போர், நம் உலகின் பல பகுதிகளில், துன்பங்களையும், வேதனைகளையும் உருவாக்கியுள்ள ஆயுதத் தாக்குதல்கள் பற்றியும் கவலைப்பட வைக்கின்றது. இந்தச் சூழல்களை நாம் புறக்கணிக்க முடியாது, மற்றும், அவற்றை மறக்கவும் நாம் விரும்பவில்லை. ஆண்டுக்கணக்காய் இடம்பெறும் போர் மற்றும், பிரிவினையால் பாதிக்கப்பட்டுள்ள மத்தியக் கிழக்கில் அமைதி நிலவுவதாக. இந்த மகிமையான நாளில் எருசலேமிலும், அந்நகர் மீது அன்புவைத்துள்ள அனைவரிலும் அமைதி நிலவ வேண்டுவோம் (காண்க. தி.பா.122). கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும், முஸ்லிம்கள் ஒன்றிணைந்து வாழ்வார்களாக. இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனர்கள் மற்றும், புனித நகரில் வாழ்கின்ற அனைவரும், திருப்பயணிகளும் அமைதியின் அழகை அனுபவிப்பார்களாக, உடன்பிறப்பு உணர்வில் வாழ்வார்களாக, ஒருவர் ஒருவரின் உரிமைகளை மதிப்பதில், புனித இடங்களுக்குச் சுதந்திரமாகச் செல்வதில் மகிழ்வார்களாக. லெபனோன், சிரியா, மற்றும், ஈராக்கில், குறிப்பாக, மத்தியக் கிழக்கில் வாழ்கின்ற அனைத்துக் கிறிஸ்தவச் சமுதாயங்களில் அமைதியும் ஒப்புரவும் நிலவுவதாக. லிபியாவிலும் அமைதி நிலவுவதாக. அதன் வழியாக, பதட்டநிலைகளைப் பல ஆண்டுகளாக எதிர்கொண்டதற்குப்பின் நிலையானதன்மை இடம்பெறும். அனைவராலும் மறக்கப்பட்டு, தொடர்ந்து மக்கள் பலியாகிவரும் போரினால் துன்புறும் ஏமன் நாட்டில் அண்மை நாள்களில் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்தம், அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கையைக் கொணர்வதாக.

மியான்மாருக்காக…

வெறுப்பு மற்றும், வன்முறை இடம்பெறும் மியான்மார் நாட்டிற்கும், ஆபத்தான சமூகப் பதட்டநிலைகள் குறையாத ஆப்கானிஸ்தான் நாட்டிற்கும் உயிர்த்த ஆண்டவர் ஒப்புரவு எனும் கொடையை நல்குவாராக. ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் மனிதாபிமான நெருக்கடி, அம்மக்களுக்குப் பெருந்துன்பங்களைக் கொணர்கின்றன.

ஆப்ரிக்க கண்டத்திற்காக..

ஆப்ரிக்கக் கண்டம் முழுவதும் அமைதி நிலவுவதாக. அதன் வழியாக, அக்கண்டத்தில், குறிப்பாக, சாகெல் பகுதியில் இடம்பெறும் பயங்கரவாதத் தாக்குதல்களால் இரத்தப்போக்கும் துயரங்களும் முடிவுற்று, உடன்பிறந்த உணர்வில் அம்மக்கள் தெளிவான ஆதரவைக் கண்டடைவார்கள். கடும் மனிதாபிமான நெருக்கடியால் தாக்கப்பட்டுள்ள எத்தியோப்பியாவில், உரையாடல் மற்றும், ஒப்புரவின் பாதை புதிதாக மேற்கொள்ளப்படுவதாக. காங்கோ குடியரசில் வன்முறை முடிவுக்கு வருவதாக. பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென்னாப்ரிக்காவின் கிழக்குப் பகுதி மக்களுக்குத் தோழமையுணர்வு, மற்றும் இறைவேண்டல் குறையாமல் கிடைப்பதாக.

இலத்தீன் அமெரிக்கா, கனடாவிற்காக…

இலத்தீன் அமெரிக்க மக்களுக்கு, உயிர்த்த கிறிஸ்து உடனிருந்து உதவுவாராக. இப்பகுதியின் சில நாடுகள் பெருந்தொற்றின் பாதிப்பால் கடும் சமுதாய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. மேலும், திட்டமிட்ட குற்றக்கும்பல், வன்முறை, ஊழல், போதைப்பொருள் வர்த்தகம் ஆகியவற்றாலும் இலத்தீன் அமெரிக்காவின் நிலைமை மோசமடைந்துள்ளது.

பூர்வீக இன மக்களோடு ஒப்புரவு பயணத்தை மேற்கொண்டுவரும் கனடாவின் கத்தோலிக்கத் திருஅவையோடு உயிர்த்த ஆண்டவர் உடன்பயணிப்பாராக. உயிர்த்த கிறிஸ்துவின் ஆவியார், பழைய காயங்களைக் குணப்படுத்துவாராக. இதயங்களில், உண்மை மற்றும், உடன்பிறந்த உணர்வை ஊன்றுவாராக.

அன்புச் சகோதரர், சகோதரிகளே, ஒவ்வொரு போரும் முழு மனிதக் குடும்பத்திற்கும், மக்களின் புலம்பெயர்வு, பொருளாதார மற்றும், உணவு நெருக்கடி, வேதனை மற்றும் துன்பத்தைக் கொணர்கின்றது. இந்த அடையாளங்களை நாம் ஏற்கனவே பார்த்துவருகிறோம். போரின் அடையாளங்களைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் நாம், பாவம், பயம், மற்றும், மரணத்தின் மீது வெற்றிகண்ட இயேசு கிறிஸ்து, தீமை மற்றும் வன்முறைக்குச் சரணடையாதிருக்குமாறு நம்மிடம் கேட்கிறார். கிறிஸ்துவின் அமைதியால் நாம் ஆட்கொள்ளப்படுவோமாக. அமைதி இயலக்கூடியதே. அமைதியை ஏற்படுத்துவது நம் கடமை. அமைதியை ஏற்படுத்துவது, நம் அனைவரின் முதல் கடமையாகும். இவ்வாறு ஊர்பி எத் ஓர்பி செய்தியை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்சிறப்பு ஆசிரையும் அளித்தார். இவ்வாசிரை தகுந்த தயாரிப்பு, மரியாதை மற்றும், பக்தியோடு பெறும் எல்லாருக்கும் நிறைபேறுபலன்கள் உண்டு.

– ரஜனி

Leave A Reply

Your email address will not be published.