இந்திய வீரர் புஜாரா இரட்டை சதம் அடித்து அசத்தல்..!!

இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா 2012 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வந்தார். குறிப்பாக முன்னாள் இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் உடன் இவரை ஒப்பிட்டு பேசும் அளவிற்கு இவர் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி சாதனை படைத்தவர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் இந்திய அணிக்காக பெரிய அளவில் ரன்கள் குவிக்காததால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடி திறமையை நிரூபித்தால் மட்டுமே மீண்டும் இடம் கிடைக்கும் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் அவர் இங்கிலாந்து நாட்டின் பிரபல உள்நாட்டு தொடரான கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார். சசெக்ஸ் அணியின் முதல் போட்டி ஏப்ரல் 14-17 தேதிகளில் நடைபெற்றது. அப்போது முதலில் களமிறங்கிய டெர்ப்ஷிர் அணி 505/8 ரன்களை குவித்து டிக்ளேர் அறிவித்த நிலையில், அடுத்து களமிறங்கிய சசெக்ஸ் அணி 174/10 ரன்களை மட்டும் சேர்த்து பாளோ ஆன் பெற்றது. முதல் இன்னிங்சில் புஜாரா 6 (15) ரன்களை மட்டுமே அடித்திருந்தார்.

இதனால், தோல்வியின் விளிம்பில் இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய சசெக்ஸ் அணியில், கேப்டன் டாம் ஹெய்ன்ஸ், புஜாரா இருவரும் எதிரணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டனர்.

இறுதியில் ஹான்ஸ் 243 (491) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில், புஜாராவை டெர்ப்ஷிர் அணி பௌலர்களால் அசைத்து பார்க்க முடியவில்லை. இந்நிலையில் புஜாரா 201 (387) ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் டிரா ஆனது. இந்த இருவரும் சேர்ந்து கிட்டதட்ட 120 ஓவர்களை சமாளித்தனர்.

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மைதானத்தில் புஜாரா முதல் போட்டியிலேயே அபாரமாக விளையாடி மீண்டும் இந்திய அணியின் தேர்வாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனால் புஜாராவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.