கிழக்கு உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதல்: எதிர்தாக்குதலுக்கு ஜெலன்ஸ்கி சூளுரை.

கிழக்கு உக்ரைன் மீது ரஷிய படைகள் தீவிர தாக்குதலை தொடங்கி உள்ளன. என்ன விலை கொடுத்தேனும் எதிர்தாக்குதல் நடத்தப்போவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சூளுரைத்தார்.

உக்ரைன் மீதான போரில் 50 லட்சம் உக்ரைனியர்கள் அகதிகளாகி உள்ளனர். தப்பி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் 90 சதவீதத்தினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவார்கள். 18 முதல் 60 வயதுடைய ஆண்கள், ராணுவ அழைப்புக்கு தகுதி உடையவர்கள் என்பதால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது.

மூன்றில் இரு பங்கு குழந்தைகள் வலுக்கட்டாயமாக வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர்.

உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் கனவு, நிறைவேறாத நிலையில் ரஷியாவின் தற்போதைய கவனம், முழுக்க முழுக்க கிழக்கு உக்ரைன் பக்கமாய் திரும்பி உள்ளது. நாட்டின் கிழக்கு தொழில் மையப்பகுதிகளை கட்டுப்படுத்துவதற்கான முழு அளவிலான தரைவழி தாக்குதல் போரின் அடுத்த கட்டமாக மாறி உள்ளது.

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷிய ப டைகள் தங்கள் முயற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் அடங்கிய டான்பாஸ் பகுதிகளை குறிவைத்து, அண்டை நகரமான கார்கிவ் உள்ளிட்ட பல பிரிவுகளில் ரஷிய படைகள் முன்னேறும் முயற்சியில் உள்ளன.

கிழக்கு டான்பாசில் 480 கி.மீ. நீளமுள்ள முன்வரிசையில் உக்ரைனிய நிலைகளை ரஷிய படைகள் தாக்கி வருகின்றன.

கிழக்கு உக்ரைனில் மட்டும் 900 வீரர்கள் வரையில் கொண்டுள்ள 76 ரஷிய படைப்பிரிவுகள், தளவாடங்கள் இருப்பதாக அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் டான்பாஸ் பிராந்தியத்தில் 70 ஆயிரம் ரஷிய துருப்புகள் இருப்பதாக உக்ரைன் மதிப்பிட்டுள்ளது.

லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் கிரெமினா நகரின் கட்டுப்பாட்டை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் மரியுபோல் நகரம் மீது ரஷிய தாக்குதல் தொடர்கிறது என உக்ரைன் ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அங்குள்ள அஜோவ் உருக்கு ஆலையில் உள்ள பதுங்கு குழிகள் மீது ரஷிய படைகள் குண்டுவீச்சைத் தொடங்கி உள்ளன. இதை அஜோவ் பிராந்திய தேசிய பாதுகாப்பு படை தளபதி டெனிஸ் புரோகோபென்கோ உறுதிப்படுத்தினார்.

பரந்து விரிந்து கிடக்கும் இந்த ஆலையில் சுரங்கப்பாதைகள் உள்ளன. அங்கு போராளிகளும், பொதுமக்களும் தஞ்சம் அடைகின்றனர். உருக்குலைந்துபோன நகரத்தின் கடைசி பெரிய எதிர்ப்பு இந்த உருக்கு ஆலைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு உக்ரைனில் போலந்து எல்லையில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் பலியாகினர். அதில் ஒருவர் பெண். 17 பேர் படுகாயம் அடைந்தனர். ஆனாலும் அங்கு ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் வெற்றிகரமாக பதில் தாக்குதல்களை நடத்தி வருவதாக ராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தனை தீவிரமாக போர் நடந்து வரும் வேளையில் உக்ரைன், ரஷியா இடையே போர்க் கைதிகள் பரிமாற்றம் நடந்துள்ளது.

10 ராணுவ அதிகாரிகள் உள்பட 60 படை வீரர்கள், பொதுமக்களில் 16 பேர் என 76 போர்க் கைதிகளை உக்ரைனிடம் ரஷியா ஒப்படைத்துள்ளது. இதை உக்ரைன் துணைப்பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்தார்.

கிழக்கு மற்றும் மத்திய உக்ரைனில் வெடி மருந்து கிடங்குகள், கட்டளை தலைமையகம், துருப்புகள் மற்றும் வாகனங்கள் உள்பட ஏராளமான ராணுவ இலக்குகளை ஏவுகணைகள் கொண்டு தாக்கியதாக மாஸ்கோ தெரிவித்தது. அதன் பீரங்கிகள் நூற்றுக்கணக்கான உக்ரைனிய இலக்குகளை தாக்கியதாகவும் , துருப்புகள், ராணுவ தளவாடங்கள் மீது 108 தாக்குதல்களை போர் விமானங்கள் நடத்தியதாகவும் ரஷியா கூறுகிறது.

உக்ரைனில் ரஷிய தாக்குதல் புதிய கட்டத்திற்குள் நுழைகிறது என்று ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த மற்றொரு பேட்டியில் “உக்ரைனில் ரஷியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது. வழக்கமான மரபுரீதியிலான ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்” என கூறினார்.

“கிழக்கு உக்ரைனில் இந்த நடவடிக்கை ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டதுபோல டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகளை முழுமையாக விடுவிக்கும் நோக்கத்தில் உள்ளது. இது தொடரும்” எனவும் கூறினார்.

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கு ரஷிய தாக்குதல்கள் தொடங்கி விட்டதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் உறுதி செய்துள்ளார். ஆனால் என்ன விலை கொடுத்தேனும் எதிர்தாக்குதல் நடத்தி போராடப்போவதாக அவர் சூளுரைத்துள்ளார்.

கெர்சன் ராணுவ ஆலையில் ஆயுதங்கள், வெடிபொருட்களுடன் ஒரு சேமிப்பு கிடங்கு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், உக்ரைனின் பாதுகாப்பு சேவை விட்டுச்சென்ற நாசவேலை குழுக்களை அடையாளம் காண்பதற்கு ரஷிய படைகள் அந்தப் பகுதியில் சோதனைகளை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே உக்ரைனுக்கு 4 விமானங்களில் ராணுவ தளவாடங்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்தார். உக்ரைனுக்கு அதிகபட்ச ராணுவ உதவியை அளிக்கிற நாடாக இன்றளவும் அமெரிக்கா விளங்குவது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.