ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான வன்முறை : மலையக அபிலாசை ஆவணம் கையளிப்பு – மனோ தலைமையில்அமெரிக்க தூதர் சந்திப்பு

இலங்கையில் இன்று போராடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட வேண்டாம் என்ற நிபந்தனையை, சர்வதேச நாணய நிதி (ஐஎம்எப்) இலங்கைக்கு உதவும் போது, இலங்கை அரசாங்கத்தின் மீது விதியுங்கள். இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் இருப்பை பதிவு செய்துக்கொண்டு நமது மக்களை பற்றிய அமெரிக்காவின் அக்கறையை இலங்கை தொடர்பான உங்கள் கொள்கை நிலைப்பாடுகளின் போது வெளிப்படுத்துங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு இன்று அமெரிக்க தூதுவரை சந்தித்து உரையாடியது. கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அமெரிக்க தரப்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங். அரசியல் துறை அதிகாரி ரூபி வுட்சைட் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மனோ எம்பியின் செயலாளர் பிரியாணி குணரட்னவும் உதவியாளராக கலந்துக்கொண்டார்.

இது தொடர்பில் மனோ எம்பி தனது டுவீட்டர் தளத்தில்,

“ஐஎம்எப் இலங்கைக்கு உதவ நினைக்கிறது. நன்றி. ஆனால், அதை ஜனநாயக நிபந்தனையுடன் செய்க. போராளிகள் மீது வன்முறை கூடாது. காலிமுகம் உட்பட நமது போராளிகள் உலகில் மிக கட்டுப்பாடான போராளிகள். அமெரிக்க தூதர் ஜூலி சங்கிடம், ரம்புக்கன நிகழ்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் கூறினேன். இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் சமூக பொருளாதார அபிலாசைகளுக்கு இலங்கை பரப்புக்கு உள்ளே தீர்வுகள் வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த சந்திப்பின் போது, மலையக தமிழரின் அரசியல் அபிலாஷை ஆவணத்தை அமெரிக்க தூதுவரிடம் கூட்டணி தலைவர் மனோ கணேசன் கையளித்தார். இலங்கையில் தென்னிலங்கையில் மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்நிலைமைகள் பற்றி அமெரிக்க தூதுவர் கேட்டு தெரிந்துக்கொண்டார்.

தான் கொரிய வம்சாவளி அமெரிக்கர் என்பதில் பெருமை அடைவதாகவும், இந்நிலையில் தமது நாட்டின் பன்மைத்தன்மை தமக்கு பலம் சேர்த்துள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். இதுவே இலங்கையும் எதிர்பார்க்கும் எதிர்காலம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் அமெரிக்க தூதுவரிடம் கூறினர்.

மத்திய மலைநாட்டுக்கு விஜயம் செய்து நேரடியாக விடயங்களை அறியுங்கள் என கூட்டணியின் பிரதிதலைவர் இராதாகிருஷ்ணன் விடுத்த அழைப்பையும் அமெரிக்க தூதுவர் ஏற்றுக்கொண்டார்.

இது தொடர்பில் அமெரிக்க தூதர் ஜூலி சங் தனது டுவீட்டர் தளத்தில்,

“மலையக தமிழர் உட்பட அநேகமான (இலங்கை) சமூகங்கள், எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. நிலையான பொருளாதார மீட்சிக்கு இலங்கை மக்களின் தலைவர்கள் அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். (இவைபற்றி) @ManoGanesan மனோ கணேசன் அவர்களுடன் உரையாடினேன்.” என்று கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.