மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோய் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த ஏப்ரல் 09 ஆந் திகதி தொடக்கம் ஏப்ரல் 15 ஆந் திகதிவரையான காலப்பகுதியில் 36 பேர் டெங்குநோய் தாக்கத்திற் குள்ளாகியுள்ளனர்.

இந்தவாரம் டெங்குதாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 நோயாளர்களும், களுவாஞ்சிக்கடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 நோயாளர்களும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 நோயாளர்களும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 நோயாளர்களும், கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 நோயாளர்களும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 நோயாளர்களும், வாழைச்சேனை, ஓட்டமாவடி, வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒரு நோயாளர்களுமாக மொத்தம் 36 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இருப்பினும் காத்தான்குடி, பட்டிப்பளை, வவுனதீவு, வாகரை, ஆரையம்பதி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

மேலும் மட்டக்களப்புமாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரை 283 பேர் டெங்குநோய்த் தாக்கத்திற் குட்பட்டுள்ளதாகவும் இதுவரை எவரும் டெங்கு நோயினால் மரணமடையவில்லை எனவும் பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தெரிவித்தார்.

இதேவேளை பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கிக் கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்குநுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் சூழலை துப்பரவாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.