மஹிந்த – சீனப் பிரதமர் திடீரென தொலைபேசியில் உரையாடல்!

இலங்கையின் அரசுத் தலைமைக்குள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு முற்றியிருப்பதாகக் கருதப்படும் சமயத்தில், நேற்று சீனாவின் பிரதமர் லீ குயாங்க், இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விரிவான பேச்சு நடத்தியிருக்கின்றார்.

இலங்கை விவகாரத்தில் இந்திய – சீன தலையீடு குறித்து பேசப்படும் இச்சமயத்தில் இந்தத் திடீர் உரையாடல் கொழும்பு அரசியலில் துருவமயப்பட்ட நிலைகளில் ஒரு பக்கத்தின் அணி சேரும் போக்கைச் சுட்டுவதாக இருக்கின்றது என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் அதிக ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு இலங்கைக்கு சீனா ஆதரவளிக்கும் என சீனாவின் பிரதமர் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான தொலைபேசி உரையாடலின்போது உறுதியளித்துள்ளார் எனக் கூறப்பட்டது.

“நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்களை சீனா உணர்கின்றது.மேலும் உங்கள் நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எங்களால் முடிந்த உதவியை செய்ய விரும்புகின்றோம்” என்றும் சீனாவின் பிரதமர் மேற்படி தொலைபேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள சில அவசர நிதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இலங்கை அரசுடன் சீனா இணைந்து செயற்படும் என்றும் சீனப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு உறுதியளித்துள்ளார்.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான விரைவான கண்காணிப்புப் பேச்சுகள், சீனாவுடனான இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைத்தல் மற்றும் சூழ்நிலை அனுமதிக்கும்போது அதிகமான சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் போன்றவை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

எங்கள் இரு நாடுகளுக்கும் இடையே நட்பு மற்றும் உறவை மேம்படுத்துவதற்கும் நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம், மேலும் இந்த நேரத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நாங்கள் உணர்கின்றோம், சிரமங்களை நிவர்த்தி செய்வதற்கும் நாங்கள் ஒன்றாக வேலை செய்வோம் என்றும் சீனப் பிரதமர் கூறியுள்ளார்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட மனிதாபிமான உதவி, தொடர்ச்சியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக சீன அரசுக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது நன்றி தெரிவித்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.