ஆப்கான் காபூலில் உள்ள மசூதியில் தற்கொலைத் தாக்குதல். 50 மேற்பட்டோர் பேர் பலி.

ஆப்கானிஸ்தான் – காபூல் நகரில் உள்ள சன்னி பிரிவினரின் கலிபா ஷகிப் என்ற மசூதி மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 50-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 78 பேர் வரை காயமடைந்தனர்.

ரமலான் மாதம் என்பதால் நேற்று வெள்ளிக்கிழமை வழிபாட்டு தலத்தில் அதிகளவானோர் வழிபாடு செய்ய குவிந்திருந்தபோது தற்கொலைதாரி குண்டை வெடிக்கச் செய்தார்.

ஆப்கானிஸ்தானில் ஷியா மற்றும் சன்னி பிரிவு இஸ்லாமியர்களிடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் ரமலான் மாதத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

தற்கொலை குண்டுதாரி என்று நாங்கள் நம்பும் ஒருவர் விழாவில் கலந்து கொண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார் என குண்டுவெடிப்பு இடம்பெற்ற ஹலிபா ஷகிப் மசூதியின் தலைவர் சையத் பாசில் ஆகா தெரிவித்துள்ளார்.

குண்டு வெடித்ததைத் தொடர்ந்து கரும்புகை எழுந்து எங்கும் பரவியது. அனைத்து இடங்களிலும் இறந்த உடல்கள் பரவியிருந்தன. நான் உயிர் பிழைத்தேன். ஆனால் எனது மருமகன்கள் உள்ளிட்ட அன்புக்குரியவர்களை இழந்துவிட்டேன் எனவும் அவர் கூறினார்.

குண்டுவெடிப்பில் 66 பேர் உயிரிழந்ததாகவும் 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதார வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. தூதரகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.

சிறுபான்மையினரை குறிவைத்து சமீபத்திய வாரங்களில் அதிகரித்துவரும் வன்முறையின் உச்சமாக இது அமைந்துள்ளது. இந்த இழிவான செயலை கண்டிக்க வார்த்தைகள் போதுமானதாக இல்லை என ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா பொதுச்செயலாளரின் துணை சிறப்புப் பிரதிநிதி மெட் நுட்சன் கூறினார்.

இதேவேளை, இந்தத் தாக்குதலை கண்டித்துள்ள ஆளும் தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரும் அமைப்பும் உடனடியாக உரிமை கோரவில்லை .

வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த வியாழக்கிழமை மாலை சில நிமிட இடைவெளிக்குள் அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புக்களில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன், 13 பேர் காயமடைந்தனர்.

பால்க் மாகாணத்தின் தலைநகரான மஸார்-இ-ஷெரீப்பில் இரண்டு தனித்தனி வாகனங்களை குறிவைத்து குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ரமழான் நோன்பை நிறைவு செய்வதற்காக வீடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவர்களே தாக்குதலில் கொல்லப்பட்டு, காயமடைந்ததாக தலிபான் அரசின் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வசிரி தெரிவித்தார்.

ஷியா முஸ்லிம்களை இலக்குவைத்தே இந்தத் தாக்குதல் இடம்பெற்றது. இந்தக் குண்டுத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ். (ISIS) தீவிரவாத அமைப்பின் உள்ளூர் கிளைக் குழுவான ஐ.எஸ்.ஐ.எல். (ISIL) பொறுப்பேற்றது.

இதற்கு சில நாட்களுக்கு முன்னர் மசார்-இ-ஷெரிப்பில் உள்ள ஷியா மசூதியில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு நகரான குண்டூஸில் உள்ள மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த சிறுபான்மை சூபி சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குறைந்தது 36 பேர் கொல்லப்பட்டனர்.

காபூலில் உள்ள ஒரு ஆண்கள் பாடசாலையில் கடந்த கடந்த வாரம் இரண்டு குண்டுகள் வெடித்ததில் ஆறு மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

மசார்-இ-ஷெரிப்பில் உள்ள மசூதி மீதான தாக்குதலை தாங்கள் நடத்தியதாக ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாத அமைப்பு கூறியது. எனினும் குண்டூஸ் குண்டுத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

சன்னி இன மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதிகள் ஷியாக்கள் மற்றும் சூபிகள் போன்ற சிறுபான்மையினரை குறிவைத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

தலிபான்களைப் போலவே ஐ.எஸ்.ஐ.எல். அமைப்பும் சன்னி குழுவாகும். ஆனால் இரண்டு அமைப்புகளுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. தலிபான்கள் வெளிநாட்டு சக்திகள் இல்லாத ஆப்கானிஸ்தானை மட்டுமே நாடினர். ஆனால் ஐ.எஸ்.ஐ.எல். துருக்கியிலிருந்து பாகிஸ்தான் மற்றும் அதற்கு அப்பால் நீளும் கலிபா முஸ்லிம் சாம்ராஜ்ஜிய ஆட்சியை விரும்புகிறது.

ஆப்கானிஸ்தானின் 38 மில்லியன் மக்கள் தொகையில் 10 முதல் 20 வீதம் வரை ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த ஷியாக்கள் உள்ளனர்.

இதற்கிடையே ஐ.எஸ்.ஐ.எல். அமைப்பை ஆப்கானிஸ்தானில் தோற்கடித்து விட்டது தலிபான்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்தக் குழு தொடர்ந்தும் முக்கிய பாதுகாப்பு சவாலாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.