உலகுக்கு கொரோனாவை வாரி வழங்கிய சீனா, தற்போது அந்தத் தொற்றுப்பரவலால் தத்தளிக்கிறது.

குறிப்பாக அந்த நாட்டின் பொருளாதார தலைநகர் ஷாங்காய் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறது. அங்கு கொரோனா தொற்றால் 400 பேர் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் அங்கு புதிதாக 7,872 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்தது நினைவுகூரத்தக்கது.

ஷாங்காய்க்கு வெளியே சீனாவின் பிரதான பகுதிகளில் 384 பேருக்கு தொற்று உறுதியானது.

140 கோடி மக்களைக் கொண்ட சீன நாடு முழுவதும் தொற்று நோய் நிலைமை மாறுபடுகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல நகரங்களில் பொது முடக்கம் போடப்பட்டுள்ளது.

பீஜிங் நகரில் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட அனுமதி இல்லை. ஓட்டல்களில் உணவுகளை வாங்கி வீட்டுக்கு எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. பூங்காக்கள், சுற்றுலா தலங்களில் 50 சதவீதத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு பீஜிங்கில் திறக்கப்பட்ட யுனிவர்சல் உல்லாச பூங்கா தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த சனிக்கிழமை முதல் வருகிற புதன்கிழமை வரையில் 10 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்தது.

பல நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக்கொண்டுள்ள நிலையில், சீனா பொது முடக்கத்தாலும், கட்டுப்பாடுகளாலும் தவிக்கிறது. இதனால் மக்களின் மே தின விடுமுறை பாதித்துள்ளது. விரும்பிய இடங்களுக்கு நினைத்த நேரத்தில் பொதுமக்கள் செல்லமுடியாத நிலை உள்ளது.

மே தின விடுமுறையை கொரோனா கட்டுப்படுத்துகிறது. இதனால் விடுமுறையை உற்சாகமாக கொண்டாட முடியாமல் மக்கள் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.