பிலிப்பைன்சில் பல்கலைக்கழக வளாக குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.

பிலிப்பனை்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா அருகே அமைந்துள்ள கியூசன் நகரில், பல்கலைக்கழகம் ஒன்று உள்ளது. இந்த பல்கலைக்கழக வாளகத்துக்குள் நெரிசலான குடியிருப்பு அமைந்துள்ளது.

அங்கு குறுகிய இடத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புக்காக கிராமபுறங்களில் இருந்து தலைநகருக்கு வந்த எண்ணற்ற ஏழை குடும்பங்கள் இந்த குடியிருப்பில் வசித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ, கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளுக்கு பரவியது.

ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீப்பற்றியதில் வானுயரத்துக்கு புகை மண்டலம் எழுந்தது. அதிகாலை நேரம் என்பதால், குடியிருப்பில் பலரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

வீடுகளில் தீப்பற்றி எரிவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்த அவர்கள், அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும் நெரிசலான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால், பலர் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில், ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், இந்த கோர விபத்தில் சுமார் 80 வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. மேலும், இந்த விபத்தில் தீயின் கோரப்பிடியில் சிக்கி 6 சிறுவர்கள் உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.