ரஷிய படை வீரர்கள் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணை தாக்குதல் நடத்தி பயிற்சி.

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது. இந்தப் போர் யாரும் எதிர்பாராத வகையில் 70 நாட்களை கடந்தும் தொடர்கிறது. இந்தப் போரினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 51 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இந்தப் போர் தொடங்கிய உடனேயே ரஷியா தனது அணுசக்தி படைகளை அதிகபட்ச உஷார் நிலையில் வைத்தது.

அதுமட்டுமின்றி, உக்ரைன் போரில மேற்கத்திய நாடுகள் நேரடியாக தலையிட்டால், அவர்களுக்கு மின்னல் வேக பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய அதிபர் புதின் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தார்.

இதெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தி, பேசுபொருளாக மாறின.

இந்த நிலையில், ரஷிய படை வீரர்கள் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை தாக்குதல்களை நடத்தி பயிற்சி பெற்றதாக ரஷிய ராணுவ அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தப் பயிற்சியை ஏறத்தாழ 100 படை வீரர்கள் எடுத்ததாக தெரிய வந்துள்ளது.

நேற்று முன்தினம் (புதன்கிழமை) போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகளுக்கு இடையேயுள்ள பால்டிக் கடலில் நடந்த போர் பயிற்சியின்போதுதான் இந்த அணு ஏவுகணை தாக்குதல் பயிற்சியை ரஷிய வீரர்கள் எடுத்துக்கொண்டுள்ளனர்.

அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை மின்னணு முறையில் ஏவி தாக்குதல் நடத்தி பயிற்சி பெற்றுள்ளனர்.

குறிப்பாக ஏவுகணை அமைப்பு லாஞ்சர்கள், விமான தளங்கள், பாதுகாக்கப்பட்ட உள்கட்டமைப்பு, ராணுவ தளவாடங்கள், எதிரியின் கட்டளை நிலைகள் ஆகியவற்றை செயற்கை இலக்குகளாக வடிவமைத்து இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தி ரஷிய படையினர் பயிற்சி பெற்றதாக ரஷிய ராணுவ அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த மின்னணு ஏவல் நடவடிக்கைக்கு பின்னர், ராணுவ வீரர்கள் சாத்தியமான பதிலடி தாக்குதல்களை தவிர்ப்பதற்காக தங்கள் நிலையை மாற்றுவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டனர் என்றும் ரஷிய ராணுவ அமைச்சகம் கூறுகிறது.

இந்த தகவல்கள் உக்ரைன் போருக்கு மத்தியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.