பொலிஸின் அடாவடித்தனம் அம்பலம்; ஆதாரத்தை வெளியிட்ட மாணவர்கள்! புதிய வகைக் கண்ணீர்ப் புகைக் குண்டு இறக்குமதி.

இலங்கையில் பொலிஸார் ஏனைய நாட்களில் பயன்படுத்தும் கண்ணீர்ப் புகைக் குண்டுக்குப் பதிலாகத் தற்போது புதிய வகைக் குண்டு ஒன்றைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

ஏனைய நாட்களில் பொலிஸார் பயன்படுத்தும் கண்ணீர்ப் புகைக் குண்டு ஒரு துண்டாகும். அது ஒரு ஒற்றைக் குப்பி எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதனைக் கையால் பிடித்து வீச முடியும்.

எனினும், நேற்று மாலை நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது வீசிய கண்ணீர்ப் புகைக் குண்டு 3 துண்டுகளாக உடைந்துள்ளன எனத் தெரியவந்துள்ளது. அது உடைந்து அதில் இருந்து வாயு வெளியேறுகின்றது.

இது வழமையான கண்ணீர்ப் புகையை விடவும் அதிக வலுவானது. அவ்வாறு பொலிஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும்போது முடிந்தளவு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கண்களை உடனடியாகத் தண்ணீரால் கழுவிவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கண்ணீர்ப் புகைக் குண்டு மிகவும் வலுவானது என்பதால் அதிலிருந்து வெளியேறும் புகை நீண்ட நேரம் காற்றில் கலந்திருக்கும்.

ஏற்கனவே பல்கலைக்கழக மாணவர்கள் மீது வீசிய கண்ணீர்ப் புகைக் குண்டுகளை அவர்கள் கைகளால் பிடித்து மீண்டும் பொலிஸார் மீது வீசியதால் புதிய வகை கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பொலிஸார் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

N 500 – CS Gas Hand Grenade (3 PCS) எனப்படும் இந்தப் புதிய வகை கண்ணீர்ப் புகைக் குண்டு கொரியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான மருந்துகள், எரிபொருட்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்குப் பணம் இல்லை என அரசு கூறுகின்ற போதிலும் கண்ணீர்ப் புகைக் குண்டு கொண்டு வருவதற்குப் பணம் உள்ளதா எனப் பல்கலைக்கழக மாணவர்கள் ‘பேஸ்புக்’ பக்கங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.