ஆயிஷா கொலையாளி அடையாளம்; 30 பேரிடம் சி.ஐ.டியினர் வாக்குமூலம்! பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியீடு.

களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம, அட்டலுகமவில் பாத்திமா ஆயிஷா என்ற 9 வயது சிறுமி கடத்திப் படுகொலை செய்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

29 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆயிஷாவின் படுகொலை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 29 வயதுடைய நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனத் தெரியவந்துள்ளது.

களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் பாணந்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு இணைந்து மேற்கொண்ட தேடுதலின்போது சந்தேநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஆயிஷாவின் பிரேத பரிசோதனை இன்று நடைபெற்றது. இது தொடர்பான அறிக்கையும் வெளியாகியுள்ளது.

ஆயிஷா படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 27ஆம் திகதி காணாமல்போயிருந்த பாத்திமா ஆயிஷா அக்ரம் என்ற சிறுமி மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆயிஷாவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய நபர்கள் உள்ளிட்ட 30 பேரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.