சென்னையில் டான்சரிடம் லிப்ட் கேட்டு விலை உயர்ந்த பைக் வழிப்பறி… நூதன திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது..

சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் (24). சினிமா டான்சரான இவர் கடந்த 19ஆம் தேதி தனது விலையுயர்ந்த இருசக்கர வாகனம் மூலமாக விவேகானந்தர் இல்லம் அருகே சென்று மெரினா பீச்சில் ஜிம்னாஸ்டிக் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

அப்போது அந்த இடத்திற்கு வந்த இருவர், தனது செல்போனில் சிம் கார்டு உடைந்துவிட்டதாகவும், உடனடியாக தனது நண்பரிடம் பேச வேண்டும் செல்போன் ஒரு நிமிடம் தருமாறு சரணிடம் கேட்டுள்ளனர். பாவமாக இருந்ததால் சரண் செல்போனை அவர்களிடம் கொடுத்தார். பின்னர் பேசிவிட்டு அவர்கள் செல்போனை கொடுத்தனர்.

பயிற்சி முடிந்த பின்பு சரண் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு கிளம்பும் போது, அதே நபர்கள் எழும்பூர் காந்தி இர்வின் பாலத்தில் இறக்கிவிடுமாறு சரணிடம் லிப்ட் கேட்டுள்ளனர். மூன்று நபர்கள் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாது என சரண் தவிர்த்த போதும், போக்குவரத்து போலீசாரை கண்டால் இறங்கி நடந்துவருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய சரண் தனது இருசக்கர வாகனத்தில் இருவரையும் ஏற்றிக்கொண்டு காந்தி இர்வின் பாலத்தில் இறக்கிவிட்டுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் நன்றாக இருப்பதாகவும், ஒரு செல்பி எடுத்துக்கொள்ளலாம் எனவும் மேலும் இருசக்கர வாகனத்தில் விளக்கு எரிந்தால் செல்பி நன்றாக இருக்கும் என அவர்கள் சரணிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து செல்பி எடுத்து கொண்டிருந்த போது, திடீரென இருவரும் சரணை கீழே தள்ளிவிட்டு, இருசக்கர வாகனத்தை திருடி தப்பிச்சென்றுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரண் உடனடியாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, பழைய குற்றவாளி புளியந்தோப்பை சேர்ந்த சசிகுமார்(22) திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்நிலையில் சசிகுமாரை போலீசார் தேடி வந்த போது, வேறு இருசக்கர வாகன திருட்டு வழக்கில் பேசின் பிரிட்ஜ் போலீசார் சசிகுமாரை கைது செய்திருப்பது தெரியவந்ததையடுத்து, அங்கு சென்ற எழும்பூர் போலீசார் இவ்வழக்கில் சசிகுமாரை கைது செய்து அழைத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சசிகுமாரிடம் விசாரித்த போது, இருசக்கர வாகனங்களை குறிவைத்து தொடர்ந்து சசிகுமார் மற்றும் அவரது கூட்டாளி தீனா ஆகியோர் இணைந்து திருடுவதை வாடிக்கையாக வைத்துள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே சசிகுமார் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சரண்ராஜிடம் திருடிய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சசிகுமாரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, தலைமறைவாக இருந்து வரும் தீனாவை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.