தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றியை தொடரும் உத்வேகத்துடன் இந்திய அணி.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் வெற்றியை தொடரும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று 4-வது ஆட்டத்தில் களம் காணுகிறது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது.

இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். முதல் இரு ஆட்டங்களில் சொதப்பிய இந்தியா 3-வது ஆட்டத்தில் எழுச்சி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட்டின் அரைசதமும், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹலின் அபார பந்து வீச்சும் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தது. இருப்பினும் இளம் கேப்டன் ரிஷப் பண்டுவின் (29, 5, 6 ரன்) பொறுப்பற்ற பேட்டிங் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த ஆட்டத்திலாவது அவர் அதிரடி காட்டுவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். தொடரை வெல்வதற்கான வாய்ப்பில் நீடிக்க இன்றைய ஆட்டத்திலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் உள்ள இந்திய அணி அதற்கான வியூகங்களை வகுத்துள்ளது.

இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் இந்தியா 2-ல் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் கண்டுள்ளது. மூன்று முறை 195 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளன. ராஜ்கோட் ஆடுகளம் எப்போதுமே பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும். அந்த வகையில் இப்போதும் ரன் விருந்தை எதிர்பார்க்கலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், அவேஷ்கான் அல்லது அர்ஷ்தீப்சிங், யுஸ்வேந்திர சாஹல்.

தென்ஆப்பிரிக்கா: பவுமா (கேப்டன்), ரீஜா ஹென்ரிக்ஸ் அல்லது குயின்டான் டி காக், பிரிட்டோரியஸ், வான்டெர் டஸன், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், வெய்ன் பார்னெல், ரபடா, கேஷவ் மகராஜ், அன்ரிச் நோர்டியா, ஷம்சி.

Leave A Reply

Your email address will not be published.