வங்குரோத்து நிலையில் அரசு! – சாடுகின்றார் சஜித்.

“இன்று அரசு வங்குரோத்தடைந்து விட்டது. ஆனால், எதிர்க்கட்சி வங்குரோத்து நிலைக்குச் சென்றுவிடவில்லை”
என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதிர்க்கட்சி வங்குரோத்தடைந்திருந்தால் ஐக்கிய மக்கள் சக்தியால் நாட்டுக்கான மூச்சுத் திட்டம், இந்நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கான பிரபஞ்சம் வேலைத்திட்டம், பஸ் நன்கொடை திட்டம் போன்ற சமூக நலத் திட்டங்களை செயற்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நாட்டின் இளைய தலைமுறையை தொழிநுட்பத்தில் பரிச்சயமான உலகில் கொடிகட்டிப் பறப்பதற்கு உதவும் முகமாக வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை வழங்கி வைக்கும் ‘பிரபஞ்சம்’ முன்னோடித் திட்டத்தின் 22 ஆவது கட்டமாக இன்று (16) மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் உள்ள நவயாலதென்ன கடுகஸ்தோட்டை, சமுத்திராதேவி மகளிர் கல்லூரிக்கு, 8 இலட்சத்து 46 ஆயிரம் (8,46,000) ரூபா மதிப்பிலான வகுப்பறைகளுக்கான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்நாட்டில் கல்வி முறை முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும். குறிப்பாக ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞானம்,கணிதம் மற்றும் பொறியியல் போன்ற பாடப்பரப்புகள் முறையாகவும், வினைத்திறனாகவும் உருவாக்கப்பட வேண்டும்.

முறைப்படி நாட்டின் அதிகாரத்தை நாம் கைப்பற்றுவோம். இதைவிடுத்து மக்களுக்குத் துரோகம் இழைத்து, பிரதமர் பதவி அல்லது பிற பட்டம் பதவிகளுக்கு விலைபோகும் எச்சில் துப்பும் பழக்கம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இல்லை.

குறைபாடுகள், போதாமைகள் மற்றும் இயலாமைகளைக் கூறும் அரசொன்று தேவையில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வாயாடல்கள் மற்றும் அறிக்கைகளை ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.