அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!!

அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்காக 50-100 படுக்கைகளை தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் கடந்த 4 மாதங்களாக கொரோனா பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது பாதிப்பு விகிதம் மெல்லமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 12,000-த்தைத் தாண்டியுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டிலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 596 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 295, செங்கல்பட்டில் 122 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, முகக் கவசம், தனி நபா் இடைவெளி உள்ளிட்ட நோய்த் தடுப்பு வழிமுறைகளை பொது மக்கள் கட்டாயம் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. மற்றொருபுறம் பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்காக 50-100 படுக்கைகளை தயார் நிலையில் வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மருத்துவத்துறை செயலர் செந்தில்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களை தொலைபேசி மூலமாக தினசரி உடல்நிலை குறித்து கேட்டறிய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை, ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் 2, 3 சதவீதத்திலேயே பாதிப்பு விகிதம் உள்ளது. எனவே இவை அதிகரிக்கும் பட்சத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.