குருந்தூர்மலை வழக்கு விசாரணை ஜூன் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு.

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, பொலிஸாரின் மேலதிக விளக்கத்துக்காக இம்மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் கடந்த 12ஆம் திகதி ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்றக் கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், குருந்தூர்மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை, கடந்த 16ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் அணைத்து, நீதிமன்றக் கட்டளை மீறப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

அந்தவகையில் வழக்கை ஆராய்ந்த நீதிவான் ரி.சரவணராஜா, குருந்தூர்மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில், பொலிஸாரிடம் விளக்கம் கோரி வழக்கை இன்றைய (23) நாளுக்குத் திகதியிட்டிருந்தார்.

அந்தவகையில், இன்று விளக்கமளிப்பதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உட்பட்டோர் நீதிமன்றிலே முன்னிலையாகி விளக்கமளித்திருந்தனர்.

அதனடிப்படையில் குருந்தூர்மலையில் விகாரையைக் கட்டிய நபர்கள், அவ்வாறு விகாரையைக் கட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கு எத்தனித்த ஆவணங்களை மாத்திரம் பொலிஸார் மன்றில் சமர்ப்பித்தனர்.

இதற்குக் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதுடன், ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய கட்டளை மீறப்பட்டுள்ளதைத் தெளிவுபடுத்தினர்.

அந்தவகையில் இது தொடர்பில் மேலதிகமாக அறிக்கையை நீதிமன்றத்துக்கு வழங்க, தமக்கு தவணை வேண்டும் என்று பொலிஸார் நீதிவானிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பொலிஸார் மீள இது தொடர்பில் விளக்கமளிப்பதற்காக, இந்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான எஸ்.தனஞ்சயன் கருத்துத் தெரிவிக்கையில்,

“குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று பொலிஸ் தரப்பு விளக்கத்துக்காகத் திகதியிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் பொலிஸ் தரப்பில் விளக்கமளிப்பதற்காக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் உட்பட்ட நபர்கள் மன்றிலே முன்னிலையாகியிருந்தனர்.

குறிப்பாக நீதிமன்றக் கட்டளையை மீறியமைக்காகவே, எம்மால் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதியன்று வழங்கப்பட்ட கட்டளையிலே சைவமக்கள் குருந்தூர்மலைக்குச் சென்று வழிபடமுடியும் எனவும், அங்கு வேறு எந்தவிதமான கட்டடங்களும் அமைக்கப்படமுடியாது எனவும் நீதிமன்று கட்டளையிட்டிருந்தது.

அவ்வாறு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மீறி, குருந்தூர்மலையில் புதிதாக விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்த விகாரை சட்ட விரோதமாகவே அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த விகாரையைக் கட்டிய நபர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நாம் நீதிமன்றில் எமது சமர்ப்பணத்தைச் செய்திருந்தோம்.

எனினும், விளக்கமளிப்பதற்காக மன்றிலே முன்னிலையாகியிருந்த பொலிஸார், குருந்தூர்மலையில் விகாரையைக் கட்டிய நபர்கள், அவ்வாறு விகாரையைக் கட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கு எத்தனித்த ஆவணங்களை மாத்திரம் மன்றிலே சமர்ப்பித்திருந்தனர்.

மேலும், இது தொடர்பிலே முழுமையான விளக்கத்தை நீதிமன்றத்துக்கு வழங்க முடியாத சூழ்நிலை இருப்பதாகத் தெரிவித்ததுடன், மேலதிகமாக இதுதொடர்பில் அறிக்கையை மன்றுக்கு வழங்கத் தமக்குத் தவணை வேண்டும் எனவும் பொலிஸார் கேட்டிருந்தனர்.

பொலிஸாரால் கூறப்பட்ட விடயங்களை, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் கடுமையாக எதிர்த்தனர்.

பொலிஸார் மீள பதில் வழங்குவதற்காக, இந்த வழக்கானது இந்த மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.